உத்தியோக பூர்வமற்ற வாகன இலக்கத் தகடுகளை பயன்படுத்த தடை

1 Min Read

உத்தியோகபூர்வ வாகனப் பதிவு இலக்கத் தகடுகளை விநியோகிப்பதில் தாமதம் நிலவும் நிலையில், தர நிர்ணயமற்ற அல்லது மாற்றியமைக்கப்பட்ட இலக்கத் தகடுகளைப் பொருத்தி வாகனங்களைச் செலுத்த அனுமதி இல்லை என வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்துக் கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்புக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் டபிள்யூ.பி.ஜே. செனவிரத்ன  இது தொடர்பில் தெரிவித்துள்ளதாவது;

உத்தியோக பூர்வ வாகனப் பதிவு இலக்கத் தகடுகள் இல்லாத நிலையில் தகுதியற்ற இலக்கத் தகடுகளைப் பயன்படுத்துவது சட்டவிரோதமானது. மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் வழிகாட்டுதலுக்கு அமைவாக, வாகனத்தின் இலக்கத்தை ‘A4’ அளவிலான தாளில் அச்சிட்டுத் தெளிவாகக் காட்சிப்படுத்த சாரதிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதேவேளை, விநியோகஸ்தர் ஒருவர் இல்லாத காரணத்தினால், கடந்த 10 மாதங்களாக வாகன இலக்கத் தகடுகளை வழங்கும் பணி இடைநிறுத்தப்பட்டது.  இதனால் 400,000 இலக்கத் தகடுகள் தேங்கியுள்ளன.எனினும், எதிர்வரும் ஜூன் மாதம் 10 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் உத்தியோகபூர்வமாக இலக்கத் தகடுகளை வழங்கும் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும்.அதேவேளை, உத்தியோகபூர்வமற்ற இலக்கத் தகடுகளைக் காட்சிப்படுத்தும்   வாகனங்களுக்கு பொலிசார் அபராதம் விதிப்பது தொடர்பில் வாகன உரிமையாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.இந்நிலையிலேயே, அங்கீகரிக்கப்பட்ட தரங்களைப் பூர்த்தி செய்யாத இலக்கத் தகடுகளைப் பயன்படுத்தும் வாகனங்களுக்கு எதிராக,  தொடர்ந்தும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வீதிப் பாதுகாப்புக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் எச்சரித்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *