புனித ஹஜ் கடமைகளுக்கு இலங்கையிலிருந்து சென்ற ஹாஜிகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மினா, அரஃபா வசதிகள் குறித்து பிரதி அமைச்சர் முனீர் முளப்பர் தலைமையிலான குழு, நேரடியாக கலந்துரையாடியுள்ளது.இக்கலந்துரையாடல், சவூதி அரேபியாவில் உள்ள இலங்கையின் ‘சிலோன் ஹவுஸில் (Ceylon House) நேற்று முன்தினம் இடம்பெற்றது. இந்நிகழ்வில் இலங்கை ஹஜ் குழுவின் தலைவர் ரியாஸ் மிஹுலார் உள்ளிட்ட குழு உறுப்பினர்கள்,
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் ஹஜ் முகவர்கள் சார்பாக பிரதான வழிகாட்டிகளும் கலந்துகொண்டனர்.
ஹஜ் யாத்திரையின் மிக முக்கியமானதும் கடினமானதுமான கட்டங்களான மினா (Mina) மற்றும் அரஃபா (Arafat) ஆகிய புனித பூமிகளில் இலங்கை ஹாஜிகளுக்காக அமைக்கப்பட்டுள்ள கூடாரங்கள் (Tents) மற்றும் சுகாதார வசதிகளின் தற்போதைய நிலைமை மற்றும் ஹஜ் நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்து இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டது.யாத்திரீகர்கள் எவ்வித தடையுமின்றி தமது மத வழிபாடுகளில் ஈடுபடும் வகையில் தங்குமிடம், குளிரூட்டி வசதிகள், குடிநீர் மற்றும் சுகாதார அமைப்புகளை சிறந்த முறையில் தயார்படுத்துவது குறித்து பிரதியமைச்சர் இதன்போது கவனம் செலுத்தினார்.



