பதவியை இழந்த விக்ரமசிங்கவுக்கு எழுத்து மூலமாக விளக்கம் தேவை

2 Min Read

இலங்கை முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரமோத்ய விக்ரமசிங்க இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழு தலைமை பதவியில் இருந்து தன்னை நீக்கியது தொடர்பில் விளையாட்டுத் துறை அமைச்சு மற்றும் இலங்கை கிரிக்கெட் சபையிடம் எழுத்துமூல விளக்கம் கோரியுள்ளார்.

விளையாட்டுத் துறை அமைச்சர் சுனில் குமராக கமகேவுக்கு கடந்த மே 21 ஆம் திகதி அனுப்பி இருக்கும் கடிதத்தில், தேர்வுக் குழுவை மறுசீரமைப்பது மற்றும் தனது ஒப்பந்தத்தை முன்கூட்டியே ரத்துச் செய்வதற்கு விளையாட்டுத் துறை அமைச்சு மற்றும் கிரிக்கெட் சபை எடுத்த முடிவு குறித்து வாய்மூலமாகவே தனக்கு கூறப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

விளையாட்டுத் துறை அமைச்சரினால் கடந்த வியாழக்கிழமை (21) புதிய தேர்வுக் குழுவொன்று நியமிக்கப்பட்டது. இலங்கை கிரிக்கெட் கோரிக்கை மேற்கொண்டதை அடுத்தே அமைச்சர் இந்த முடிவை எடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது. 1973 இன் 25 ஆம் இலக்க விளையாட்டுச் சட்டத்தின் 39(1) பிரிவு மற்றும் 2025 மே 21 ஆம் திகதிய 243ஃ24 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் தனது வழங்கப்பட்டிருக்கும் அதிகாரத்தின் கீழ் அமைச்சர் இந்த முடிவை எடுத்துள்ளார்.

இதன்படி இலங்கை முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கபில விஜேகுணவர்தன தலைமையிலான ஐந்து பேர் கொண்ட புதிய தேர்வுக் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. இதில் முன்னாள் இலங்கை வீரர்களான அமல் சில்வா, பிரண்டன் குருப்பு, வருன வராகொ மற்றும் வனீசா டி சில்வா இடம்பெற்றுள்ளனர்.

இலங்கை அணி தலா மூன்று ஒருநாள் மற்றும் டி20, இரு டெஸ்ட் போட்டிகளில் ஆடுவதற்காக நாளை (26) மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கும் நிலையிலேயே இந்த அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

புதிய தேர்வுக் குழு தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் 61 வயது விஜேகுணவர்தன 1988 மற்றும் 1992 காலப் பகுதியில் இலங்கைக்காக இரண்டு டெஸ்ட் மற்றும் 26 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் ஆடியுள்ளார். எனினும் 2015 ஆண்டு அவர் தேர்வுக் குழு தலைவராக இருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இரண்டு ஆண்டு ஒப்பந்தமாகவே கடந்த 2025 டிசம்பரில் தேர்வுக் குழு தலைவராக தம்மை நியமித்ததாக விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார். தமது ஒப்பந்தம் முன்கூட்டியே நீக்கப்பட்டதற்கான காரணத்துடன் தமது பதவி தொடர்பில் எடுக்கப்பட்ட எந்தவொரு முடிவு தொடர்பிலும் உத்தியோகபூர்வமான எழுத்துமூல அறிவித்தலை தரும்படி அமைச்சு அல்லது இலங்கைக் கிரிக்கெட்டை அவர் கோரியுள்ளார்.

‘அனைத்து நிர்வாக மாற்றங்களும் மிகுந்த வெளிப்படைத்தன்மையுடன், சரியான நடைமுறைகளைப் பின்பற்றி மற்றும் பரஸ்பர மரியாதையுடன் மேற்கொள்ளப்படுவதை உறுதிசெய்யும் பொருட்டு, இந்த தீர்மானம் தொடர்பாக தங்களது அலுவலகம் அல்லது இலங்கை கிரிக்கெட் எனக்கு அதிகாரபூர்வமான எழுத்து மூல அறிவிப்பை வழங்குமாறு பணிவுடன் மற்றும் மரியாதையுடன் கேட்டுக்கொள்கிறேன்’ என்று பிரமோத்ய விக்ரமசிங்க எழுதி இருக்கும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விக்ரமசிங்க தலைமையிலான தேர்வுக் குழுவில் இந்திக்க சேரம், தரங்க பரணவிதான, வினோதன் ஜோன் மற்றும் ரசாங்கலி டி அல்விஸ் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். உபுல் தரங்கவின் தேர்வுக் குழுவுக்கு பதிலே இந்தத் தேர்வுக் குழு நியமிக்கப்பட்டிருந்தது.

இந்தக் குழு தமது முதல் பணியாக நடந்து முடிந்த 2026 டி20 உலகக் கிண்ணத்திற்கான இலங்கை குழாத்தையே தேர்வு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *