லங்கா பிரீமியர் லீக் தொடருக்கு 14 வீரர்கள் முன்கூட்டி ஒப்பந்தம்

2 Min Read

எதிர்வரும் லங்கா பிரீமியர் லீக் தொடரில் வீரர்கள் வரைவு தேர்வுக்கு முன்னதாக ஐந்து அணிகளாலும் மொத்தம் 14 வீரர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். அதேபோன்று தொடரில் பங்கேற்பதற்கு 21 நாடுகளைச் சேர்ந்த 650 இற்கும் மேற்பட்ட வெளிநாட்டு வீரர்கள் பதிவு செய்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

லங்கா பிரீமியர் லீக் தொடர் எதிர்வரும் ஜூலை 17 தொடக்கம் ஓகஸ்ட் 8 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. இதில் தம்புள்ள சிக்ஸர்ஸ் அணி அதிகபட்சமாக முன்கூட்டியே நான்கு வீரர்களை ஒப்பந்தம் செய்துள்ளது. இலங்கையின் தினேஷ் சந்திமால் மற்றும் துஷ்மன்த சமீர ஆகியோருடன் பாகிஸ்தானின் ஷஹீப்சதா பர்ஹான் மற்றும் தென்னாபிரிக்காவின் ரீசா ஹென்ட்ரிக்ஸ் ஆகியோர் அந்த அணிக்கு ஒப்பந்தமாகியுள்ளனர்.

கண்டி றோயல்ஸ் அணி வனிந்து ஹசரங்க, அஞ்சலோ மத்தியூஸ் உடன் இங்கிலாந்து சகலதுறை வீரர் மொயீன் அலியை ஒப்பந்தம் செய்துள்ளது. கோல் கல்லன்ட்ஸ், தசுன் ஷானக்க மற்றும் எஷான் மாலிங்க அகியோரை பெற்றுள்ளது. ஜப்னா கிங்ஸ் அணிக்கு துனித் வெள்ளாலகே, பானுக்கு ராஜபக்ஷ மற்றும் பங்களாதேஷ் சகலதுறை வீரர் ஷகீப் அல் ஹசன் ஆகியோர் ஆடுவது உறுதியாகியுள்ளது. கொழும்பு கெப்ஸ், குசல் மெண்டிஸ் மற்றும் கமிந்து மெண்டிஸ் ஆகியோரை முன்கூட்டியே ஒப்பந்தம் செய்துள்ளது. இதேவேளை லங்கா பிரீமியர் லீக் தொடரில் ஆடுவதற்காக விண்ணப்பித்திருக்கும் வெளிநாட்டு வீரர்கள் தொடர்பான விபரம் வெளியாகியுள்ளது. இதற்கு 650இற்கும் மேற்பட்ட வீரர்கள் பதிவு செய்திருப்பதாக லங்கா பிரீமியர் லீக் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதில் சர்வதேச கிரிக்கெட் கௌன்சிலின் (ஐ.சி.சி.) முழு அங்கத்துவ நாடுகளில் பாகிஸ்தானைச் சேர்ந்த 102 வீரர்களும், தென்னாபிரிக்காவின் 66 வீரர்களும், மேற்கிந்திய தீவுகளின் 75 வீரர்களும், பங்களாதேஷைச் சேர்ந்த 48 வீரர்களும் நியூசிலாந்தின் 41 வீரர்களும், 24 பேர் அவுஸ்திரேலியாவில் இருந்தும், 15 பேர் இங்கிலாந்தில் இருந்தும் 12 பேர் இந்தியாவில் இருந்தும் பதிவு செய்துள்ளனர்.

அதேநேரம் ஐ.சி.சி. இன் இணை அங்கத்துவ நாடுகளான ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் அயர்லாந்து ஆகியவற்றில் இருந்தும் அதிகளவிலான பதிவுகள் இடம்பெற்றுள்ளன. இதன்படி மொத்தம் 21 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் இம்முறை லங்கா பிரீமியர் லீக் தொடருக்காக பதிவு செய்துள்ளனர்.

எனினும் இந்த வீரர்களில் இருந்து 310 வீரர்கள் மட்டுமே இறுதியாகப் பட்டியலிடப்பட்டு ஜூன் 01ஆம் திதகி நடைபெறும் லங்கா பிரீமியர் லீக் வீரர்களின் தேர்வுக்காக உள்ளடக்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *