பிஃபா உலகக் கிண்ணத்தில் பங்கேற்கும் ஈரான் தனது பயிற்சி முகாமை அமெரிக்காவின் அரிசோவில் இருந்து மெக்சிகோவின் அமெரிக்க எல்லை நகரான டிஜுவானாவுக்கு மாற்றியுள்ளது. சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் ஒப்புதலை அடுத்து இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
‘மெக்சிகோ மற்றும் அமெரிக்காவின் எல்லையிலும் பசுபிக் பெருங்கடலுக்கு அருகாமையிலும் இருக்கும் டிஜுவானாவில் முகாம் அமைக்கவுள்ளோம்’ என்று ஈரான் கால்பந்து சம்மேளனத் தலைவர் மஹ்தி தாஸ், இஸ்டாகிராம் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போரினால் ஏற்பட்டிருக்கும் விசா பிரச்சினையை தவிர்ப்பதற்கு இது உதவும் என்று குறிப்பிட்டிருக்கும் அவர் அணியினருக்கு ஈரான் எயார் விமானத்தில் நேராக மெக்சிகோவில் இருந்து பறக்க முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடாவில் நடைபெறவுள்ள பிஃபா உலகக் கிண்ண போட்டியில் ஜி குழுவில் இடம்பெற்றிருக்கும் ஈரான் எதிர்வரும் ஜூன் 15 இல் லொஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறும் முதல் போட்டியில் நியூசிலாந்தை எதிர்கொள்ளவுள்ளது. ‘நாம் இருக்கும் இடத்தில் இருந்து போட்டி நடைபெறும் இடத்திற்கான விமானப் பயண தூரம் 55 நிமிடங்கள் மாத்திரமாகும்’ என்று தாஜ் சுட்டிக்காட்டியுள்ளார்.
பீஃபா உலகக் கிண்ணத்தில் ஈரான் தனது அனைத்துப் போட்டிகளையும் அமெரிக்காவில் ஆடும் நிலையில் அது போட்டியில் பங்கேற்பதில் அண்மைக் காலம் வரை சந்தேகம் நிலவி வந்தமை குறிப்பிடத்தக்கது.



