எதிர்வரும் பிஃபா உலகக் கிண்ண போட்டியில் ஈரான் பங்கேற்பதில் தொடர்ந்து சந்தேகம் நிலவி வந்தபோதும் அந்த அணி உலகக் கிண்ணத்திற்கு தயாராகும் வகையில் பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் படங்கள் அணியின் உத்தியோகபூர்வ சமூகதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
அணியினர் அடையாளம் குறிப்பிடப்படாத இடம் ஒன்றில் பயிற்சியில் ஈடுபடுவது மற்றும் உலகக் கிண்ணத்திற்கான ஜெர்சியுடன் அணியினர் எடுத்துக்கொண்ட படங்கள் உட்பட வீடியோ பதிவுகள் இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்டுள்ளது.
அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடாவில் எதிர்வரும் ஜூன், ஜூலையில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் ஈரான் ஜி குழுவில் இடம்பெற்றுள்ளது. அந்த அணியின் அனைத்துப் போட்டிகளும் அமெரிக்காவில் இடம்பெறுகின்ற நிலையில் அமெரிக்காவுடனான போர் காரணமாக ஈரான் அணி அமெரிக்கா செல்வதில் சந்தேகம் நிலவி வருகிறது.
எவ்வாறாயினும் சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் கியானி இன்பான்டினோ அண்மையில் வெளியிட்ட அறிவிப்பில் ஈரான் உலகக் கிண்ணத்தில் பங்கேற்பதை உறுதி செய்திருந்தார். ஈரான் அணி நிர்வாகமும், ஈரான் அணி உலகக் கிண்ணத்திற்கான பயற்சிகளை சொந்த நாட்டிலும் அண்டை நாடான துருக்கியிலும் செய்து வருவதாக குறிப்பிட்டிருந்தது.



