இலங்கை மற்றும் நியூசிலாந்து ஏ அணிகளுக்கு இடையிலான முதலாவது உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவுற்றது.
ஹம்பாந்தோட்டையில் நேற்று (19) நிறைவடைந்த நான்கு நாட்கள் கொண்ட இந்தப் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை ஏ அணி கடைசி நாள் ஆட்ட நேர முடிவின்போது –4 விக்கெட் இழப்புக்கு — 168 ஓட்டங்களை பெற்று இரண்டாவது இன்னிங்ஸில் —70 ஓட்டங்களால் முன்னிலை பெற்றது.

இதில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை ஏ அணி முதல் இன்னிங்ஸில் 97.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 381 ஓட்டங்களைப் பெற்றது. மத்திய வரிசையில் வந்த சொனால் தினூஷ 148 பந்துகளில் 9 பௌண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 108 ஓட்டங்களைப் பெற்றார்.
இந்நிலையில் தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த நியூசிலாந்து அணிக்கு கேர்டி ஹிர்பி (162) மற்றும் டிம் ரொபின்சன் (130) ஆகியோர் 2 ஆவது விக்கெட்டுக்கு 218 ஓட்டங்களை பகிர்ந்து கொண்டனர். இதன்மூலம் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 153.4 ஓவர்களில் 479 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில் இசித்த விஜேசுந்தர, ரமேஷ் மெண்டிஸ் மற்றும் சொனால் தினூஷ ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை பதம்பார்த்தனர்.
இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது மற்றும் கடைசி உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் போட்டி எதிர்வரும் ஏப்ரல் 23 ஆம் திகதி காலியில் ஆரம்பமாகவுள்ளது.



