மத்திய கிழக்கில் அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் தீவிரமடைந்துள்ள நிலையில், ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதனால் அங்கு சிக்கியுள்ள பிரித்தானிய குடிமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில், பிரித்தானிய அரசு ஓமன் நாட்டின் மஸ்கட் சர்வதேச விமான நிலையத்திலிருந்து சிறப்பு மீட்பு விமானம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.
ஓமன் நேரப்படி புதன்கிழமை இரவு 11 மணிக்கு புறப்படும் இந்த விமானம், முதலில் மிகவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும்.

பிரித்தானிய குடிமக்கள், அவர்களின் துணைவர் மற்றும் 18 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் இந்த விமானத்தில் பயணிக்க தகுதியுடையவர்களாவர்.
ஆனால் அதிகாரப்பூர்வமாக அழைக்கப்படாமல் விமான நிலையத்திற்கு செல்ல வேண்டாம் என பிரித்தானிய வெளிவிவகார அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஈரான், அமெரிக்கா மற்றும் அதன் அரபு கூட்டாளிகளின் தளங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியதால், மத்திய கிழக்கு பிராத்தியத்தில் விமானப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பல பிரித்தானிய குடிமக்கள் இன்னும் சிக்கியுள்ளனர்.
பிரித்தானிய வெளிவிவகார செயலாளர் யெவெட் கூப்பர், “பிரித்தானிய குடிமக்களின் பாதுகாப்பே எங்கள் முன்னுரிமை” என்றும் மேலும் பல வழிகளில் மீட்பு விமானங்களை ஏற்பாடு செய்ய முயற்சிகள் நடைபெற்றுவருவதாக தெரிவித்துள்ளார்.
சில வணிக விமானங்களும் துபாயில் இருந்து இயங்குகின்றன. பிரிட்டிஷ் ஏர்வேஸ், மஸ்கட்டில் இருந்து லண்டன் ஹீத்ரோவிற்கு வணிக விமானம் ஒன்றை இயக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.




