2030 கால்பந்து உலகக் கிண்ணத்தை நடத்த உள்ள மொராக்கோ, லட்சக்கணக்கான நாய்களை கொன்று வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
2030 கால்பந்து உலகக் கிண்ணம்
வடக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள மொராக்கோ(morocco), போர்ச்சுக்கல் மற்றும் ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளுடன் இணைந்து 2030 FIFA கால்பந்து உலகக் கிண்ணத்தை நடத்தும் வாய்ப்பை பெற்றுள்ளது.

மொராக்கோவில் சுமார் 30 லட்சம் தெரு நாய்கள் உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
உலகக்கோப்பை நடத்த தயாராவதன் ஒரு பகுதியாக தெரு நாய்களை மொராக்கோ அரசு கொன்று வருவதாக விலங்கு நல ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
நாய்களை கொல்லும் மொராக்கோ
இது தொடர்பாக சர்வதேச விலங்கு நலன் மற்றும் பாதுகாப்பு கூட்டணி (IAWPC) வெளியிட்டுள்ள அறிக்கையில், மொராக்கோ அதிகாரிகள் தெரு நாய்களை பட்டினி போட்டு கொல்வதாகவும், விஷம் வைப்பதாகவும், சில நாய்களை உயிருடன் எரிப்பதாகவும் தெரிவித்துள்ளது.

இந்த நடைமுறையை மறைமுகமாக செயல்படுத்தியதற்காக FIFAவையும் அந்த அமைப்பு குற்றம் சாட்டியது. விஷம் கொடுத்தல், கட்டாய பட்டினி போடுதல் மற்றும் நாய்களைச் சுட்டுக் கொன்றது ஆகியவற்றை ஆவணப்படுத்தும் புகைப்படங்கள் உட்பட 91 பக்க ஆவணத்தை FIFAவிடம் சமர்ப்பித்தது.
உலக கிண்ணத்திற்கான ஏலச் செயல்முறையின் போது விலங்கு நலனுக்கு உறுதியளித்தாகவும், தற்போது உள்ளூர் குழுக்களுடன் இணைந்து உறுதிமொழிகள் நிறைவேற்றப்படுவதை உறுதிசெய்ய தொடர்ந்து செயல்பட்டு வருவதாக FIFA தெரிவித்துள்ளது.
நாய்கள் கொல்லப்படுவதற்கு எதிரான IAWPCவின் பிரச்சாரத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள ஹாலிவுட் நடிகர் மார்க் ருஃபாலோ, “உலகளாவிய விளையாட்டு நிகழ்வுக்குத் தயாராக மில்லியன் கணக்கான நாய்களைக் கொல்வது முன்னேற்றம் அல்ல, அது ஒரு தார்மீக தோல்வி.
உலகக் கோப்பை மூடிய கதவுகளுக்குப் பின்னால் நடக்கும் துன்பங்களின் அடிப்படையில் கட்டமைக்கப்படாமல், உலகை ஒன்றிணைக்க வேண்டும். மனிதாபிமான தீர்வுகள் உள்ளன. வன்முறையை விட இரக்கத்தைத் தேர்ந்தெடுப்பது நாம் அனைவரும் பகிர்ந்து கொள்ளும் பொறுப்பாகும்” என தெரிவித்துள்ளார்.
2030 FIFA உலகக் கோப்பைக்கு முன்னதாக மொராக்கோ தெருநாய்களைக் கொல்லத் திட்டமிட்டுள்ளது என்பது முற்றிலும் பொய்யானது என லண்டனில் உள்ள மொராக்கோ தூதரகம் மறுப்பு தெரிவித்துள்ளது.




