T20 உலக கிண்ண தொடரின் இந்தியா – பாகிஸ்தான் போட்டிக்கான விளம்பர கட்டணம் பல லட்சங்களுக்கு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்தியா – பாகிஸ்தான் போட்டி
2026 T20 உலக கிண்ண தொடர் பிப்ரவரி 7 ஆம் திகதி தொடங்கி, மார்ச் 6 ஆம் திகதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற உள்ளது.

நாளை கொழும்புவில் நடைபெற உள்ள இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான போட்டிக்கு பலத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.
முன்னதாக இந்தியா உடன் விளையாட மறுத்த பாகிஸ்தான் பின்னர், ஐசிசியின் கடும் அழுத்தம் காரணமாக விளையாட ஒப்புக்கொண்டது.
வழக்கமாகவே இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டியை காண உலகளவில் ரசிகர்கள் ஆர்வம் காட்டுவார்கள்.

இந்த போட்டியை நேரில் காண ஏரளாமான ரசிகர்கள் கொழும்பு செல்லும் நிலையில், இந்தியாவின் முக்கிய நகரங்களில் இருந்து கொழும்பு செல்வதற்கான விமான கட்டணம் மற்றும் கொழும்புவில் உள்ள தங்கும் விடுதிகளின் கட்டணம் 3 மடங்காக அதிகரித்துள்ளது.

அதேபோல், இந்த போட்டியின் இடையே ஒளிபரப்பப்படும் விளம்பரங்களுக்கான கட்டணமும் கணிசமாக உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
விளம்பர கட்டணம்
வழக்கமாக இந்தியா பாகிஸ்தான் போட்டி இடையே ஒளிபரப்பப்படும் விளம்பரங்களுக்கு 10 விநாடிகளுக்கு ரூ.20 -25 லட்சம் வரை இருக்கும்.

இந்த முறை டிவியில் ஒளிபரப்படும் விளம்பரங்களுக்கான கட்டணம் ரூ.30 – 40 லட்சமாக உயர்ந்துள்ளது. அதே போல் ஜியோ செயலில் ஒளிபரப்பப்படும் விளம்பரங்களுக்கு ரூ.10 -15 லட்சமாக அதிகரித்துள்ளது.

இந்தப் போட்டி பல கோடி பார்வையாளர்களை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், பிராண்டுகள் எந்த விலை கொடுத்தாவது விளம்பர ஸ்லாட்டை பெற தயாராக உள்ளது.
வாகனங்கள், எஃப்.எம்.சி.ஜி, நிதி சேவைகள் மற்றும் ரியல் எஸ்டேட் துறைகளைச் சேர்ந்த நிறுவனங்கள் குறிப்பிடத்தக்க ஆர்வத்தைக் காட்டியுள்ளன.
உலக கிண்ணத்தில், எமிரேட்ஸ் , ஓபன்ஏஐ, பிர்லா ஓபஸ், ரேபிடோ, அமுல், மஹிந்திரா & மஹிந்திரா, ஹூண்டாய் மோட்டார் கம்பெனி, பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் மற்றும் பொது காப்பீட்டு கவுன்சில் உள்ளிட்ட பல நிறுவனங்கள் விளம்பரம் செய்கிறது.
2026 T20 உலக கிண்ண ஒளிபரப்பாளரான ஜியோஸ்டார், இந்தப் போட்டியிலிருந்து சுமார் ரூ.2,000 கோடி விளம்பர வருமானத்தை ஈட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.




