காசாவில் இஸ்ரேல் கடந்த இரு நாட்களில் நடத்திய தாக்குதல்களில் ஒன்பது பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
வடக்கு காசாவில் காசா நகரில் அல் கதீப் மாவட்டத்தில் நேற்றுக் காலை இடம்பெற்ற இஸ்ரேலின் ஆளில்லா விமானத் தாகுதலில் இரு சிறுவர்கள் உட்பட குறைந்தது மூவர் கொல்லப்பட்டதாக அல் ஷிபா வைத்தியசாலையை மேற்கோள்காட்டி அல் ஜசீர செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
மறுபுறம் மத்திய காசாவில் நேற்று இடம்பெற்ற பிறிதொரு தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். அல் அக்ஸா வைத்தியசாலை இந்தத் தகவலை வெளியிட்டபோதும் அது தொடர்பில் மேலதிக விபரங்களை வழங்கவில்லை.
இஸ்ரேலிய இராணுவம் காசாவில் பல இலக்குகள் மீது தாக்குதல் நடத்தியதாகத் தெரிவித்ததுடன், அந்தத் தாக்குதல்கள் தமது படையினருக்கு ஏற்பட்ட அச்சுறுத்தல்களை அகற்றுவதை நோக்கமாகக் கொண்டவை எனக் கூறியது.
முன்னதாக காசா நகரின் மாநகர பொது பூங்காவுக்கு அருகே ஒன்றுகூடி இருந்தவர்கள் மீது கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற வான் தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். இந்தப் பகுதி இடம்பெயர்ந்த மக்கள் அடைக்கலம் பெற்றிருக்கும் இடம் என்பதோடு தாக்குதலில் மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.
மறுபுறம் காசா நகரின் மேற்கே தால் அல் ஹாவா பகுதியில் வாகனம் ஒன்றை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதல் ஒன்றில் குறைந்தது மூவர் கொல்லப்பட்டதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த இரு தாக்குதல்களும் ஹமாஸ் போராளிகளை இலக்கு வைத்து நடத்தப்பட்டதாக இஸ்ரேல் கூறியபோதும் அதற்கான எந்தவொரு ஆதாரத்தையும் வெளியிடவில்லை.
உறவினர்களும் நண்பர்களும் திங்களன்று கொல்லப்பட்ட ஐந்து பேரில் இருவருக்கு அல்-ஷிஃபா மருத்துவமனையில் இறுதி அஞ்சலி செலுத்தினர். காசாவின் மிகப்பெரிய மருத்துவமனையான அங்கிருந்து, அவர்களின் உடல்கள் அடக்கஸ்தலத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது.
கடந்த ஒக்டோபரில் போர் நிறுத்தம் ஒன்று எட்டப்பட்டபோதும் காசாவில் அண்மைய தினங்களில் இஸ்ரேல் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது. மத்திய காசாவின் டெயிர் அல் பலாஹ்வில் இஸ்ரேல் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடத்திய தாக்குதலில் மூன்று வயதினர் உட்பட இரு பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதோடு கடந்த சனிக்கிழமை நடத்திய தாக்குதல்களில் மேலும் நான்கு பலஸ்தீனர்கள் பலியாகினர்.
‘போர் நிறுத்தம் எதுவும் இல்லை. 2023 ஒக்டோபர் 7ஆம் திகதிக்குப் பின்னர் காசாவில் ஒரு நல்ல நாள்கூட இருந்ததில்லை,’ என்று திங்களன்று நடத்தப்பட்ட தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களில் ஒருவரின் உறவினரான அம்ஜத் அபு அப்தோ, ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
‘ட்ரோன்களின் சத்தத்தால் நாங்கள் தூங்குவதில்லை என்று சத்தியமாகச் சொல்கிறேன். எந்த நேரத்திலும் தாக்குதலுக்கு உள்ளாகிவிடுவோமோ என்ற அச்சத்துடன்தான் தூங்குகிறோம்’ என்றார்.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் ஒன்று எட்டப்பட்டது தொடக்கம் இஸ்ரேலின் தாக்குதல்களில் காசாவில் இதுவரை 1,320 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டிருப்பதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
காசாவில் கடந்த 2023 ஒக்டோபரில் போர் வெடித்தது தொடக்கம் சுமார் 73,500 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதோடு சுமார் 175,500 பேர் காயமடைந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் சிறுவர்கள் மற்றும் பெண்கள் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.




