சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகள் அதிகளவில் டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு மாறுவது அந்நிறுவனங்களின் வளர்ச்சிக்கு பெரும் வாய்ப்பாக அமையுமென, டிஜிட்டல் தொழில்நுட்ப பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்துள்ளார்.டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மூலம் வெளிப்படைத்தன்மை, பாதுகாப்பு மற்றும் வங்கிகள் உள்ளிட்ட நிதி நிறுவனங்களுடன் நம்பகத்தன்மையை உருவாக்கிக்கொள்ள முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டில் ஃபின்டெக் (Fintech) பயன்பாட்டை விரிவுபடுத்தும் நோக்கில், இலங்கை ஃபின்டெக் மன்றம் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்ப அமைச்சு இணைந்து ஏற்பாடு செய்துள்ள முதலாவது ஃபின்டெக் திருவிழா தொடர்பில், விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.இங்கு உரையாற்றிய பிரதியமைச்சர்;
”நாட்டின் 60 சதவீதத்துக்கும் அதிகமான சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகள் இன்னும் பணம் மற்றும் நாணயத்தாள்களையே அதிகம் நம்பியுள்ளன.இத்தகைய நிறுவனங்கள் டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு மாறினால், நிதி வலிமை மற்றும் வர்த்தக திறனை வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு தெளிவாக வெளிப்படுத்த முடியும். இதன் மூலம் சட்டபூர்வமான நிதி வசதிகளைப் பெற்றுக்கொள்வது இலகுவாகும்.இந்தியாவில் 90 சதவீதத்துக்கும் அதிகமான பரிவர்த்தனைகள் யு.பி.ஐ. (UPI) போன்ற ஃபின்டெக் தளங்கள் ஊடாக இடம்பெறுகின்றன.
இலங்கையிலும் டிஜிட்டல் கொடுப்பனவுகளின் பயன்பாட்டை மேலும் அதிகரிக்க வேண்டிய அவசியம் உள்ளது என்றும் குறிப்பிட்டார்.இதேவேளை, லங்காபே ஊடாக 2025ஆம் ஆண்டில் ரூ.429 ட்ரில்லியனுக்கும் அதிக பெறுமதியான நிகழ்நேர மொத்த தீர்வுகள் இடம்பெற்றுள்ளதாக அதன் பிரதம நிறைவேற்று அதிகாரியும் ஃபின்டெக் மன்றத்தின்தலைவருமான சன்ன டி சில்வா, இந்த ஊடகச் சந்திப்பில் கூறியுள்ளார். 2025ஆம் ஆண்டில் நிகழ்நேர கொடுப்பனவுகளின் பெறுமதி ரூ.23 ட்ரில்லியனையும், அரசாங்கத்தின் டிஜிட்டல் கொடுப்பனவுகளின் பெறுமதி ரூ.3.2 ட்ரில்லியனையும் கடந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.




