நேபாளத்தில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமையைத் தொடர்ந்து, சீனா 13,200 அவசர நிவாரணப் பொருட்களை நேபாளத்திற்கு அனுப்பியுள்ளது.
ஓகஸ்ட் 30ஆம் திகதி உள்ளூர் நேரப்படி காலை 7.00 மணியளவில், சீன விமானப்படைக்குச் சொந்தமான இரண்டு Y-20 ரக பாரிய சரக்கு விமானங்கள் தொடர்ச்சியாக நேபாளத்தின் திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தன.
இந்த விமானங்களில் கூடாரங்கள், போர்வைகள், அவசர உணவுப் பொதிகள் மற்றும் முதலுதவி உபகரணங்கள் உள்ளிட்ட 13,200 நிவாரணப் பொருட்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.
மேலும், சுரங்க மீட்பு நடவடிக்கைகளில் நிபுணத்துவம் பெற்ற 4 சீன நிபுணர்களும் இந்த விமானங்கள் மூலம் நேபாளத்தை சென்றடைந்துள்ளனர்.
நிவாரணப் பொருட்கள் கையளிக்கும் நிகழ்வில் நேபாளத்திற்கான சீனத் தூதுவர் சாங் மாவ்மிங் மற்றும் நேபாள அறிவியல், தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க அமைச்சர் மஹாவீர் புன் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த நிவாரணப் பொருட்கள் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முன்னெடுக்கப்படும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு முக்கிய பங்களிப்பை வழங்கும் என அமைச்சர் மஹாவீர் புன் தெரிவித்ததுடன், நேபாள அரசாங்கத்தின் சார்பில் சீன அரசாங்கத்திற்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, நேபாளத்தின் அனர்த்த நிலைமை மற்றும் மீட்பு நடவடிக்கைகள் தொடர்பில் இரு நாடுகளும் நெருக்கமான தொடர்பில் உள்ளதுடன், எதிர்காலத்தில் அனர்த்த கண்காணிப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த இரு தரப்பும் நடவடிக்கை எடுக்கவுள்ளன.
முன்னதாக, நேபாள அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமைவாக சீனா 5 சுரங்க மீட்பு நிபுணர்களை அவசரமாக அனுப்பியிருந்தது. அவர்கள் ஆகஸ்ட் 29ஆம் திகதி பெய்ஜிங் நேரப்படி மாலை 4.58 மணியளவில் நேபாளத்தின் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிக்கு சென்றடைந்து, நீர்மின் நிலைய சுரங்கத்தில் இடம்பெற்ற மீட்பு நடவடிக்கைகளில் உடனடியாக இணைந்தனர்.




