சுப்பர் சிக்ஸ் சுற்றுக்கு முன்னேற மூன்று அணிகள் இடையே போட்டி

2 Min Read

இலங்கை கால்பந்து சம்மேளனம் நடத்தும் முன்னணி கழகங்களுக்கு இடையிலான சுப்பர் லீக் தொடரில் ஆரம்ப சுற்றில் இருந்து சுப்பர் சிக்ஸ் சுற்றுக்கு நுழைவதற்கு ரெட் ஸ்டார், புளூ ஸ்டார் மற்றும் புளூ ஈகள்ஸ் (கடற்படை) இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. ஆரம்பச் சுற்று நிறைவில் முன்னிலை பெறும் ஆறு அணிகள் இடையே சுப்பர் சிக்ஸ் சுற்றுப் போட்டி நடைபெறுவதோடு, தற்போது நாவலப்பிட்டி அப் கன்ட்ரி லயன்ஸ் விளையாட்டுக் கழகம் 6 போட்டிகளில் 27 கோல்களுடன் 18 புள்ளிகளைப் பெற்று தோல்வியுறாது இருப்பதோடு, கொழும்பு கால்பந்து கழகம் 6 போட்டிகளில் 11 கோல்களுடன் 14 புள்ளிகளைப் பெற்றுள்ளது.

ரினோன் 6 போட்டிகளில் ஆடி 18 கோல்களுடன் 12 புள்ளிகளையும், சீ ஹோக்ஸ் 6 போட்டிகளில் 12 கோல்களுடன் 11 புள்ளிகளையும் பெற்று முறையே மூன்று மற்றும் நான்காம் இடங்களில் உள்ளன.

ஐந்தாவது இடத்தில் 8 புள்ளிகளைப் பெற்றிருக்கும் ரெட் ஸ்டார் அணிக்கு அடுத்து டிபென்டர்ஸ், ரட்னம் மற்றும் கொழும்பு கால்பந்து கழகங்களுடன் போட்டிகள் எஞ்சி இருப்பதோடு, ஆறாவது இடத்தில் 7 புள்ளிகளைப் பெற்றிருக்கும் புளூ ஸ்டார் அணிக்கு ரினோன், டிபென்டர்ஸ் மற்றும் ரட்னம் அணிகளுடன் போட்டிகள் உள்ளன. 7 ஆவது இடத்தில் 7 புள்ளிகளைப் பெற்றிருக்கும் புளூ ஈகள்ஸ் அணி அடுத்து அப் கன்ட்ரி லயன்ஸ், ரினோன் மற்றும் சீ ஹோக்ஸ் (கடற்படை) அணிகளுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இந்த மூன்று அணிகளிலுமே வெளிநாடுகளில் இருந்து வரவழைக்கப்பட்ட வீரர்கள் குறிப்பிடத்தக்க அளவில் திறமையை வெளிப்படுத்தி வருவதால் அந்த அணிகளுக்கு இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. அதேபோன்று சீ ஹோக்ஸ் அணியில் பயிற்சியாளராக இங்கிலாந்து நாட்டவரான ஜோஜி கே. ராவ் செயற்படுவதும் அந்த அணிக்கு புதிய அனுபவத்தைப் பெற்றுக்கொடுத்துள்ளது.

இம்முறை சுப்பர் லீக்கில் 10 அணிகளில் 6 அணிகள் சுப்பர் சிக்ஸ் சுற்றுக்கு தகுதி பெறும் நிலையில் எஞ்சிய 4 அணிகள் தரமிறக்கச் சுற்று போட்டியில் மோதவுள்ளன. தொடர்ந்து 9ஆவது இத்திற்கு வரும் அணி சம்பியன்ஸ் லீக்கில் இரண்டாம் இடம் பிடித்த ஜாவா லேன் உடன் போட்டியிட வேண்டி இருப்பதோடு, 10 ஆம் இடம் பிடிக்கும் அணி சம்பியன்ஸ் லீக் போட்டி வரை தரமிறக்கப்படும்.

கொழும்பு சுகததாச அரங்கில் இன்று (28) பிற்பகல் 3.30 மணிக்கு ஆரம்பமாகும் அப்கன்ட்ரி லயன்ஸ் – புளூ ஈகள்ஸ் போட்டியுடன் சுப்பர் லீக் தொடரின் 7ஆவது வாரத்திற்கான போட்டிகள் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *