அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் கடந்த வௌ்ளிக்கிழமை தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, இரு நாடுகளும் ஏட்டிக்குப் போட்டியாக வரி விதிப்புக்களை அறிவித்துள்ளன.
கனேடியப் பொருட்கள் பலவற்றின் மீது 50 சதவீத வரிகள் விதிக்கப்படுவதாக அமெரிக்கா அறிவித்துள்ள நிலையில், கனடா பிரதமர் மார்க் கார்னி, ட்ரம்பின் வரி விதிப்புக்கு பதிலாக செப்டம்பர் 8 ஆம் திகதி முதல், உருக்கு, பால் பொருட்கள், வீட்டு உபகரணங்கள் மற்றும் இலத்திரனியல் பொருட்கள் மீது தானும் வரிகள் விதிப்பதாகக் கூறியுள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து கருத்து தெரிவித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கனடா ஒரு நாடாக இல்லாமல், அதன் நன்மைகளை விரும்புவதாகக் கூறியுள்ளார்.
கடந்த பல ஆண்டுகளாக அமெரிக்க விவசாயிகளிடம் மிகப்பெரிய அளவிலான வரிகளை கனடா வசூலித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த புதிய வரிகள், நம்மைப் புண்படுத்தவும் பிரிக்கவும் வடிவமைக்கப்பட்ட ஒரு தவறான கணிப்பு என்று கனடியப் பிரதமர் மார்க் கார்னி கூறியதைத் தொடர்ந்து ட்ரம்பின் மேற்படி கருத்துக்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவும் கனடாவும் இப்போது ஒரு வர்த்தக போரில் ஈடுபட்டுள்ளன என்றுள்ள கனடா பிரதமர், அவர்கள் அதிகமாகக் கேட்டார்கள், மிகக் குறைவாகவே வழங்கினார்கள் என்றும் கூறினார்.
பி.பி.சி




