போலி தகவல்களை சமூகமயப்படுத்தினால் கடும் சட்ட நடவடிக்கை

2 Min Read

வடக்கில் தென்மராட்சி பளைப் பகுதி காட்டுக்குள் விடுதலைப் புலிகளின் முகாம் இருப்பதாக தெரிவித்து இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்த திட்டமிட்ட வகையில் போலி தகவலை வெளியிட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளதோடு போலி தகவல்களை சமூகமயப்படுத்தினால் அதற்கெதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அந்த நபரிடம் இருந்து இரண்டு போலியான தேசிய அடையாள அட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் 3 குற்றங்கள் தொடர்பில் சந்தேக நபராக அவர் நீதிமன்றத்தில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சபையில் குறிப்பிட்ட அமைச்சர், அவர் மனித உரிமை ஆணைக்குழுவில் எவ்வித பதவியையும் வகிக்கவில்லை என்பதையும் சுட்டிக்காட்டினார்.

பாராளுமன்றத்தில் நேற்று விசேட கூற்றொன்றை முன்வைத்து உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கில் தென்மராட்சி பளை பகுதியிலுள்ள காட்டுப் பகுதியில் விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம் ஒன்று இருப்பதாகவும், அங்கு குண்டுகள் உற்பத்தி செய்யப்படுவதாவும் குறிப்பிட்டு சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகின. அது தொடர்பில் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

பளை பகுதியில் தியாகராசா என்ற நபர் வனஜீவராசிகள் திணைக்களத்துக்கு சொந்தமான காணியை சட்ட விரோதமான முறையில் கைப்பற்றி அதில் கட்டிடம் ஒன்றை நிர்மாணித்து சிறு ஆடை உற்பத்தி நிலையத்தை நடத்தி வந்துள்ளார். காணியின் ஏனைய பகுதிகளில் விவசாய பயிர்ச்செய்கையையும் அவர் மேற்கொண்டு வந்துள்ளார்.இந்த சம்பவம் தொடர்பில் வனஜீவராசிகள் திணைக்களம் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளது. அதனைத் தொடர்ந்து குறித்த சந்தேக நபர் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பின்னர் 4 இலட்சம் ரூபா பெறுமதியான ஐந்து சரீர பிணைகளில் அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

றித்த காணிக்குள் பிரவேசிப்பதற்கும் நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.விடுதலைப் புலிகள் முகாம் ஒன்றை நடத்துவதற்கும், குண்டுகளை உற்பத்தி செய்வதற்கும் இடமளித்துள்ளது என்று தவறான நிலைப்பாட்டை மக்கள் மத்தியில் உருவாக்கும் வகையில் சங்கீத் ஜயசேகர என்ற நபர் போலியான விடயங்களை வெளிப்படுத்தியுள்ளார்.கண்டங்களுக்கு இடையிலான மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் என்று தம்மை குறிப்பிடும் சங்கீத் ஜயசேகர என்பவர் கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தி ‘பளையில் காட்டுக்குள் புலிகள் அமைப்பின் முகாம் ‘ என்று இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தும் வகையில் வெறுக்கத்தக்க வகையில் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.இந்த நபர் குறிப்பிட்ட விடயங்களை அடிப்படையாகக் கொண்டு பயங்கரவாத தடுப்புப் பிரிவு விசேட விசாரணைகளை மேற்கொண்டு அந்த நபரை கைது செய்துள்ளது. நாட்டில் மீண்டும் பயங்கரவாத செயற்பாடுகள் இடம்பெறுவதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது. இனங்களுக்கு இடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தும் வகையில் போலியான விடயங்களை சமூகமயப்படுத்தினால் அதற்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *