பங்களாதேஷுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான அவுஸ்திரேலிய அணியில் இருந்து ஆரம்ப வீரர் ஜக் வெதரல்ட் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதில் மூன்று ஆண்டுகளின் பின் இடது கை துடுப்பாட்ட வீரர் மத்தியூ ரேன்ஷோ அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
பங்களாதேஷுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அதிர்ச்சி தோல்வியை சந்தித்து தொடரில் 0–1 என பின்தங்கி இருக்கும் ஆஸி. அணி தோடர் தோல்வியை தவிர்ப்பதற்கு கட்டாய வெற்றியை எதிர்பார்த்தே இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் களமிறங்கவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி மெக்கேவில் எதிர்வரும் ஓகஸ்ட் 22 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இதற்கான 13 பேர் கொண்ட ஆஸி. குழாத்தில் ஒரே மாற்றமாகவே வெதரல்ட் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவர் முதல் டெஸ்டில் 23 மற்றும் 0 ஓட்டங்களையே பெற்றிருந்தார்.
அவருக்கு பதில் அழைக்கப்பட்டிருக்கும் 30 வயது ரேன்ஷோ ஆஸி. ஒருநாள் மற்றும் டி20 அணிகளில் தொடர்ந்து இடம்பெறும் வீரராக இருநதபோதும் டெஸ்ட் அணிக்கு அழைக்கப்படுவது 2023 இன் பின் முதல் முறையாகும்.




