இலங்கை அணியின் வெற்றிக்கு இன்னும் 288 ஓட்டங்கள் தேவை

2 Min Read

இந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் 372 ஓட்ட வெற்றி இலக்கை நோக்கி இரண்டாவது இன்னிங்ஸை ஆடி வரும் இலங்கை அணி நேற்று (18) நான்காவது நாள் ஆட்டநேர முடிவில் 84 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

காலி சர்வதேச அரங்கில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் தேநீர் இடைவேளைக்குப் பின்னர் தனது இரண்டாவது இன்னிஸை ஆரம்பித்த இலங்கை அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. முதல் இன்னிங்ஸில் டக் அவுட் ஆன நிஷான் மதுஷ்க 6 ஓட்டத்துடன் வெளியேறியதோடு தனது கன்னி போட்டியில் களமிறங்கிய பசிந்து சூரியமண்டார முகங்கொடுத்த முதல் பந்திலேயே டக் அவுட் ஆனார்.

அடுத்து வந்த கமிந்து மெண்டிஸினால் 2 ஓட்டங்களையே பெற முடிந்ததோடு மறுமுனை ஆரம்ப வீரர் லஹிரு உதார 58 பந்துகளில் 16 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் ஆட்டமிழந்தார். இதனால் இலங்கை அணி 47 ஓட்டங்களைப் பெறுவதற்குள்ளேயே 4 விக்கெட்டுகளை இழந்தது.

இந்நிலையில் நேற்று நன்காம் நாள் ஆட்டநேர முடிவின்போது இலங்கை அணி 34 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 84 ஓட்டங்களை பெற்றுள்ளது. அணித் தலைவர் தனஞ்சய டி சில்வா 31 ஓட்டங்களுடனும் சொனால் தினூஷ 25 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர். இதன்படி இலங்கை அணி இந்த டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறுவதற்கு போட்டியின் கடைசி நாளான இன்று (19) 6 விக்கெட்டுகள் கைவசம் இருக்க இன்னும் 288 ஓட்டங்களை பெற வேண்டி உள்ளது.

இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸுக்காக 462 ஓட்டங்களைப் பெற்றதோடு இலங்கை தனது முதல் இன்னிங்ஸில் 284 ஓட்டங்களை குவித்தது. இந்நிலையில் நேற்று தனது இரண்டாவது இன்னிஸை ஆரம்பித்த இந்திய அணிக்கு இலங்கை பந்துவீச்சாளர்கள் நெருக்கடி கொடுத்தமை குறிப்பிடத்தக்கது.

இதனால் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 48.5 ஓவர்களில் 193 ஓட்டங்களுக்கே சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. இதன்மூலம் இந்திய அணி மேலும் சவாலா வெற்றி இலக்கொன்றை நிர்ணயிப்பதை தடுக்க முடிந்தது.

இதன்போது அசித்த பெர்னாண்டோ 4 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு பிரபாத் ஜயசூரிய 3 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *