இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி லீட்ஸ், ஹெடிங்கலி மைதானத்தில் இன்று (19) ஆரம்பமாகவுள்ள நிலையில் உபாதைக்கு உள்ளாகி இருக்கும் பாக். அனுபவ வீரர் பாபர் அசாம் இந்தப் போட்டியில் பங்கேற்பதில் தொடர்ந்து சந்தேகம் நிலவி வருகிறது.
இன்று போட்டிக்கு முன்னதாக அவர் அணியில் இடம்பெறுவது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்று அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அண்மையில் நடந்து முடிந்த மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின்போதே அசாமின் விரலில் காயம் ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த வாரம் நடைபெற்ற பயிற்சிப் போட்டியின்போது அவரது அதே கையில் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து முன்னெச்சரிக்கையாக அவர் அந்தப் போட்டியில் தொடர்ந்து ஆடவில்லை.
பாபர் அசாம் இல்லாத பட்சத்தில் இன்று ஆரம்பமாகும் போட்டியில் சவுத் ஷகீல் மற்றும் அவைஸ் சபர் இருவரும் அணியில் இடம்பெற வாய்ப்பு உள்ளது.
மூன்று போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுவதற்காகவே பாகிஸ்தான் அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




