முஸ்லிம் பெண் ஊழி­யர்­களின் ஆடை விவகாரம்; இனவாதம் துளிர்விட இடமளிக்கப்படாது

2 Min Read

தற்காலிக தீர்வாக அஷ்ரப் வைத்தியசாலைக்கு இடமாற்றம்

விசாரணைகள் முடிந்ததும் நிரந்தர தீர்வு

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் புதிதாக பணியமர்த்தப்பட்ட முஸ்லிம் சுகாதார ஊழியர்களின் ஆடை விவகாரத்தை அடிப்படையாகக் கொண்டு, நாட்டில் மீண்டும் இனவாதத்தைத் தூண்டும் வகையிலான எந்தவொரு முயற்சிக்கும் அரசாங்கம் ஒருபோதும் அனுமதியளிக்காதென சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

குறித்த விவகாரம் தொடர்பில் ஏற்பட்டுள்ள மோதல் நிலைமையை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில், தற்காலிக தீர்வாக சம்பந்தப்பட்ட சுகாதார ஊழியர்கள், அஷ்ரப் நினைவு வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

முழுமையான விசாரணைகள் நிறைவடைந்த பின்னர், சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கு உரிய தீர்வு வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே, அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார். ”உத்தியோகபூர்வ சீருடைக்கு பதிலாக மாற்று வகையான ஆடையை அணிந்தமை தொடர்பிலேயே இந்தப் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.இலங்கை பன்முகத்தன்மை மற்றும் பல்கலாசாரத்தைக் கொண்ட நாடாக இருப்பதால், பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த மக்கள் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் வெவ்வேறு வகையான ஆடைகளை அணிந்து வருகின்றனர். அதேவேளை, அரச சேவைக்கென உத்தியோகபூர்வ சீருடை நடைமுறையில் இருப்பதுடன், அது தொடர்பான சுற்றறிக்கையும் காணப்படுகிறது.

உத்தியோகபூர்வ சீருடையில் மாற்றங்களை ஏற்படுத்துவது அல்லது புதிய ஆடை இணைப்புகளை அறிமுகப்படுத்துவது நீண்டகால நடைமுறையாகும். இதற்காக சுகாதார அமைச்சின் உத்தியோக பூர்வ உடை தொடர்பான குழுவுடன் கலந்துரையாடி சுற்றறிக்கையில் தேவையான மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும். இந்த விவகாரத்தை பயன்படுத்தி சில இனவாதக் குழுக்கள் தமது நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன . மீண்டும் இந்த நாட்டில் இனவாதம் தலைதூக்குவதற்கு அனுமதிக்க முடியாது. மக்களின் உரிமைகளை மதிப்பதுடன் இனவாதத்திற்கும் இடமளிக்கக் கூடாது. குறித்த பிரதேசத்தில் சுகாதார சேவைகளை தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்வது சுகாதார அமைச்சராக தமக்குள்ள பொறுப்பாகும். எனவே, இவ்விவகாரம் தொடர்பான முழுமையான விசாரணைகள் நிறைவடையும் வரை தற்போதைய நிலைமையை கட்டுப்படுத்தும் தற்காலிக நடவடிக்கையாகவே சம்பந்தப்பட்ட ஊழியர்கள் அஷ்ரப் நினைவு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *