நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதால் மக்களின் எந்தப் பிரச்சினைக்கும் தீர்வு கிடைக்காது. நாட்டு மக்களின் பிரச்சினைகளை புறக்கணித்து புதிய அரசியலமைப்புத் திருத்தத்தை கொண்டுவருவதன் மூலம் ஜனநாயகத்தை சீர்குலைத்து சர்வாதிகார ஆட்சியை ஏற்படுத்த அரசாங்கம் முயற்சிக்கிறது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டியுள்ளார்.
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பதற்கான நடவடிக்கை நீதித்துறையின் சுதந்திரத்துக்கு வழங்கப்படும் மரண அடியாகும். இதன் மூலம் ஜனநாயகமும் சட்டத்தின் ஆட்சியும் பாதிக்கப்படுவதுடன், நாட்டின் நீதி வழங்கும் பொறிமுறையும் பலவீனமடையும். நாட்டில் எண்ணற்ற பிரச்சினைகள் காணப்படும் நிலையில் அவற்றுக்கு தீர்வு காணாமல் தனிக்கட்சி ஆட்சியை நிறுவ அரசாங்கம் முயற்சித்து வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
கிரிந்த மீன்பிடித் துறைமுகப் பகுதியில் வசிக்கும் மீனவர்களின் பிரச்சினைகளை கேட்டறிவதற்காக அங்கு சென்றிருந்தபோதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
”நாட்டில் விவசாயிகள், மீனவர்கள், தொழில்முனைவோர் மற்றும் உற்பத்தியாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதுடன் கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளை மேம்படுத்துவதன் மூலமே வளமான நாடும் அழகான வாழ்க்கையும் உருவாக்கப்பட முடியும்.
அத்துடன், மக்கள் மீது விதிக்கப்படும் வரிகளை குறைப்பதாகவும், மின்சாரக் கட்டணத்தை 33 சதவீதத்தால் குறைப்பதாகவும், துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்படும் விலையிலேயே எரிபொருளை வழங்குவதாகவும் அரசாங்கம் முன்னர் வாக்குறுதி அளித்திருந்த போதிலும் அவற்றில் எதுவும் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை.” என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.




