கையடக்கத் தொலைபேசி மற்றும் நவீன தொழில்நுட்பங்களுக்கு மக்கள் தற்போது அடிமையாகியுள்ளதால், குடும்பக் கட்டமைப்பு மற்றும் மனித உறவுகளும் சீர்குலைந்து வருவதாக பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
திறந்த சந்தைப் பொருளாதாரம் நாட்டிற்கு அறிமுகப்படுத்தப்பட்டதோடு நுகர்வுவாதம் சமூகத்திற்குள் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள அவர், இதன் மூலம் மக்கள் மத்தியில் செயற்கையான ஆசைகளை உருவாக்கி பணம் சம்பாதிப்பதே முதன்மை பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.சீதுவை பகுதியில் நடைபெற்ற மத வழிபாட்டு நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள பேராயர்,
திறந்த சந்தைப் பொருளாதாரமானது மக்கள் மத்தியில் இதற்கு முன்னர் இல்லாத எல்லையற்ற ஆசைகளையும் தேவைகளையும் ஏற்படுத்தி வருகிறது.திறந்த சந்தையானது மக்களின் உண்மையான தேவைகளிலன்றி, செயற்கையாக உருவாக்கப்பட்ட ஆசைகள் மூலம் பணம் சம்பாதிக்கும் நோக்கத்திலேயே கட்டுப்படுத்தப்படுகிறது.தற்போது புதிய கையடக்கத் தொலைபேசிகள் சந்தைக்கு விற்பனைக்கு வந்தால், அதைப் பெற வேண்டும் என்ற மனநிலை உருவாகியுள்ளது. முன்பு தொலைபேசி என்பது அழைப்புகளை மேற்கொள்வதற்கும் செய்திகளைப் பரிமாறிக்கொள்வதற்குமான ஒரு சாதனமாக மட்டுமே இருந்தது. ஆனால் இன்று பலரின் முழு வாழ்க்கையும் அதனைச் சுற்றியே இயங்குகிறது. இரவு முழுவதும் நித்திரைக்குச் செல்லாமல் அதனைப் பயன்படுத்துகின்றனர். இதன் விளைவாக பெற்றோர்–பிள்ளைகள் இடையேயான உறவுகளும் குடும்ப வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளன. அத்துடன் கல்வி கற்றதன் மூலம் மட்டுமே உலகைப் பற்றிய முழுமையான அறிவைப் பெற்றுவிட்டோம் என்று எவரும் கருதக் கூடாது. சமூகத்தில் உயர்ந்த நிலையை அடையும் போது பணிவையும் மனிதநேய விழுமியங்களையும் பாதுகாக்க வேண்டியது அவசியம்.




