ஜப்பானின் தெற்குத் தீவான கியூஷுவில் உள்ள குமாமோட்டோ மாகாணத்தில் நேற்று நண்பகல் 7.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானதைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டதோடு வீதிகளும் சேதமடைந்துள்ளன. அத்தோடு சுமார் 50 பேர் காயமடைந்துள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இத்தீவில் ஒரு மணி நேரத்திற்குள் இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கங்கள், மாகாணத்தின் தலைநகருக்கு அருகிலுள்ள உகி நகரின் தெற்கே ஏற்பட்டதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து, அம்மாகாணத்தில் 3.3 முதல் 4.5 ரிக்டர் வரையிலான 26 கூடுதல் பின் அதிர்வுகள் ஏற்பட்டுள்ளன. இந்த நிலநடுக்கங்கள் பதிவானதைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.
இந்த நிலநடுக்கங்களைத் தொடர்ந்து சுமார் 50,000 வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும், உகி பகுதிவாசிகள் பல இடங்களில் தீ விபத்துகள் ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
ஜப்பானிய பிரதமர் சனே டகாயிச்சி இந்நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றிய போது, ‘இந்நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் சேதங்களின் விபரங்கள் முழுமையாகக் கிடைக்கப்பெறவில்லை’.
ஆனால் மக்கள் காயமடைந்துள்ளதாக எங்களுக்கு ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது. சில பகுதிகளில் மின்வெட்டும் தீயும் ஏற்பட்டுள்ளன. வீதிகளும், பாலங்களும் சேதமடைந்துள்ளதோடு கட்டடங்களும் இடிந்து விழுந்துள்ளன’ என்றுள்ளார்.
மேம்பால நெடுஞ்சாலை உட்பட முக்கிய வீதிகளில் பெரிய விரிசல்கள் ஏற்படடுள்ளன. சரக்கு ரயில் ஒன்று தடம்புரண்டதோடு ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன. ஜே.ஆர். கியூஷு ரயில்வே நிறுவனம் தனது அதிவேக புல்லட் ரயில்கள் உள்ளிட்ட சேவைகளை நிறுத்தியதாகக் கூறியது. விமானங்களும் தரையிறக்கப்பட்டன.
சேத மதிப்பீடுகள் இடம்பெறுவதால் 150,000 இற்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்ற மையங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ நிறுவனம் தெரிவித்துள்ளது.
மிகப்பெரிய அதிர்வுகளை உணர்ந்த பகுதிகளில் ஒரு வாரத்திற்குள் மேலும் வலுவான நிலநடுக்கங்கள் ஏற்படக்கூடும் என்பதாலும், நிலச்சரிவு அபாயம் இருப்பதாலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று ஜப்பான் வானிலை ஆய்வு மையத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் நில அதிர்வு ஆய்வு அதிகாரிகள், இந்நிலநடுக்கம் கடல் மட்டத்திலிருந்து 10 கிலோ மீற்றர் ஆழத்தில் ஏற்பட்டதாகத் தெரிவித்தனர்.
ரொய்ட்டர்ஸ், டெலிகிராப்,
ஏ.பி.சி நியூஸ்




