இராணுவ நடவடிக்கையின் போது தடுத்து வைக்கப்பட்டிருந்த 60 பலஸ்தீனிய கைதிகளை இஸ்ரேல் நேற்று முன்தினம் காசாவில் விடுவித்தது.
சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் உதவியுடன் இவர்கள் தெற்கு காசாவில் உள்ள கான் யூனிஸுக்கு கெரெம் ஷலோம் எல்லைக் கடவையின் ஊடாக அனுப்பப்பட்டதாக பலஸ்தீனிய வாஃபா செய்தி நிறுவனம் தெரிவித்தது.
இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் கடந்த ஒக்டோபரில் ஏற்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ் விடுவிக்கப்பட்ட மிக அதிக கைதிகள் இவர்களாவர் என்றும் பலஸ்தீனிய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
விடுவிக்கப்பட்ட இக்கைதிகள் நாசர் மருத்துவ வளாகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் அவர்கள் மருத்துவர்களால் பரிசோதிக்கப்பட்டு, தடுப்புக்காவலால் ஏற்பட்ட காயங்கள் மற்றும் பிற பாதிப்புகளுக்கு சிகிச்சை பெற்றதாகவும் சர்வதேச செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது.
இக்கைதிகள் இஸ்ரேலின் நெகேவ் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக எரெம் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாத நிலவரப்படி, சுமார் 4,900 பலஸ்தீனியர்கள் இஸ்ரேலிய சிறைகளில் உள்ளனர் என்றும், அவர்களில் 1,000 இற்கும் மேற்பட்டோர் குற்றச்சாட்டு அல்லது விசாரணையின்றி நிர்வாகத் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்றும் பலஸ்தீனிய கைதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அர்ப் நியூஸ்




