முதலீட்டாளர்களுக்கு குத்தகை அடிப்படையில் காணிகள்

1 Min Read

புதிய கைத்தொழில்களை நிறுவுவதற்காக முதலீட்டாளர்களுக்காக காணிகள் வழங்கப்படவுள்ளன.

இதற்கென நாட்டின் 13 பிராந்திய கைத்தொழில் பேட்டைகளில் அமைந்துள்ள காணித் துண்டுகள் 35 ஆண்டுகள் நீண்டகால குத்தகை அடிப்படையில் வழங்கப்படவுள்ளது.இத்திட்டத்துக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.இக்காணிகள் 23 முதலீட்டாளர்களுக்கு குத்தகை அடிப்படையில் வழங்கப்படவுள்ளன. பிராந்திய மட்டத்தில் கைத்தொழில் அபிவிருத்தியை ஊக்குவிக்கும் நோக்கில், கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பிராந்திய கைத்தொழில் பேட்டை அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது. இந்த வேலைத்திட்டத்தின் கீழ், தெரிவு செய்யப்பட்ட காணிகளில் முதலில் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு, பின்னர் பொருத்தமான முதலீட்டாளர்களுக்கு அவை குத்தகை அடிப்படையில் வழங்கப்படும்.

சமர்ப்பிக்கப்பட்ட முதலீட்டு யோசனைகளை மதிப்பீடு செய்ததன் பின்னர், 1990 ஆம் ஆண்டின் 46 ஆம் இலக்க கைத்தொழில் ஊக்குவிப்புச் சட்டத்தின் கீழ் நிறுவப்பட்டுள்ள பிராந்திய கைத்தொழில் சேவைகள் குழுவும், அமைச்சின் திட்ட மதிப்பீட்டுக் குழுவும் இணைந்து 23 திட்டங்களுக்கு காணிகளை ஒதுக்கீடு செய்யும்.

அங்கீகரிக்கப்பட்டுள்ள இந்த 23 திட்டங்களின் மொத்த முதலீட்டு பெறுமதி சுமார் 2,805.26 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 870 நேரடி வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதற்கமைய, குறித்த 23 முதலீட்டாளர்களுக்கு 35 ஆண்டுகள் காலத்திற்கு காணிகளை குத்தகை அடிப்படையில் வழங்குவதற்காக, கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *