8 சந்தேகநபர்களில் 3 பேர் வெளிநாட்டுக்கு தப்பியோட்டம்

2 Min Read

போர்ட் சிட்டி பகுதியில் சீனப் பிரஜை ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக எட்டு சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்களில் மூவர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாகவும், அவர்களை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வர தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கொழும்பு பிராந்தியத்திற்குப் பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் நிஷாந்த சொய்சா தெரிவித்தார்.

கொழும்பு மற்றும் மேல் மாகாணத்தில் அண்மைய நாட்களில் இடம்பெற்ற குற்றச் சம்பவங்கள் தொடர்பாக சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல்களின் உண்மை நிலையை விளக்கும் வகையில் நேற்று (27) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

கடந்த ஜூலை 23ஆம் திகதி நள்ளிரவில் போர்ட் சிட்டியில் இடம்பெற்ற சீனப் பிரஜையின் கொலை மற்றும் அண்மையில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் குறித்தும் இதன்போது விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.

பிரதி பொலிஸ்மா அதிபரின் தகவலின்படி, கடந்த 23ஆம் திகதி அதிகாலை 3.00 மணியளவில் போர்ட் சிட்டியில் சீனப் பிரஜைகள் குழுவொன்றுக்கிடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. இதன்போது ஒருவர் கடத்தப்பட்டதுடன், பின்னர் அவரது சடலம் எஹலியகொட பகுதியில் கண்டெடுக்கப்பட்டது.

உயிரிழந்தவர் கணினி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நிதி மோசடிகளில் ஈடுபட்டு சட்டவிரோதமாக பணம் சம்பாதித்த குழுவொன்றுடன் தொடர்புடையவர் என்பது விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இக்கொலை இதுபோன்ற இரண்டு குற்றக் குழுக்களுக்கிடையிலான மோதலின் விளைவாக ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக அடையாளம் காணப்பட்ட எட்டு சந்தேகநபர்களில், பிரதான சந்தேகநபர்கள் இருவர் சம்பவம் நடைபெற்ற சில மணி நேரங்களிலேயே நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயன்றபோது கைது செய்யப்பட்டனர். அவர்கள் இருவரும் சீனப் பிரஜைகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, அடையாளம் காணப்பட்ட எட்டு பேரில் மூவர் ஏற்கனவே நாட்டை விட்டு வெளியேறியுள்ளதுடன், அவர்களை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

விசாரணைகளின் போது, குற்றச் செயலுக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கருதப்படும் இரண்டு ஏர் பிஸ்டல்கள், ஒரு வோக்கி-டோக்கி கருவி, ஒரு கைப்பேசி மற்றும் பல வாகனங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

ஆரம்பகட்ட விசாரணைகளை போர்ட்  சிட்டி பொலிஸார் மேற்கொண்டிருந்த போதிலும், பொலிஸ்மா அதிபரின் ஆலோசனையின் பேரில் மேலதிக விசாரணைகள் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவிடம் (CCD) ஒப்படைக்கப்பட்டுள்ளன. மேலும், இலங்கையிலுள்ள சீனத் தூதரகத்துடனும் சீன அரசாங்கத்துடனும் இணைந்து சந்தேகநபர்கள் மற்றும் உயிரிழந்த நபர் தொடர்பான மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையில், கல்கிசை, பொரலஸ்கமுவ, நவகமுவ, வத்தளை மற்றும் தெமட்டகொட பகுதிகளில் அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக பிரதி பொலிஸ்மா அதிபர் தெரிவித்தார்.

இந்தச் சம்பவங்கள் தொடர்பாக பல சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், மேலும் ஒருவரை நேற்று (27) கைது செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *