கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான அனுமதி அட்டைகளில் இணையவழியாக திருத்தங்களை மேற்கொள்வதற்காக வழங்கப்பட்டுள்ள கால அவகாசம் எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 03ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணியுடன் நிறைவடைவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா லியனகே தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 10ஆம் திகதி முதல் செப்டெம்பர் மாதம் 05ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள 2,532 பரீட்சை நிலையங்களில் உயர்தரப் பரீட்சை நடைபெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இம்முறை பரீட்சைக்குத் தோற்றவுள்ள பாடசாலை விண்ணப்பதாரர்களின் அனுமதி அட்டைகள் ஏற்கனவே சம்பந்தப்பட்ட பாடசாலைகள் அமைந்துள்ள வலயக் கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அனைத்து அதிபர்களும் தமது பாடசாலைக்குரிய வலயக் கல்வி அலுவலகத்தின் பரீட்சைப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதிக் கல்விப் பணிப்பாளர் அல்லது உதவிக் கல்விப் பணிப்பாளரிடமிருந்து அனுமதி அட்டைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.தனிப்பட்ட விண்ணப்பதாரர்களின் அனுமதி அட்டைகள் அவர்களது தனிப்பட்ட முகவரிகளுக்கு தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. பாடசாலை விண்ணப்பதாரர்களின் அனுமதி அட்டைகளில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், இலங்கைப் பரீட்சைகள் திணைக்களத்தின் www.doenets.lk இணையத்தளத்திற்குச் சென்று, அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பயனாளர் பெயர் (User Name) மற்றும் கடவுச்சொல் (Password) ஆகியவற்றைப் பயன்படுத்தி தமது கணக்கில் நுழைந்து தேவையான திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்.
பரீட்சை தொடர்பான மேலதிக தகவல்களைப் பெற 1911 அவசர அழைப்பு இலக்கத்தையோ அல்லது 011 2784208, 011 2784537 ஆகிய தொலைபேசி இலக்கங்களையோ தொடர்புகொள்ளலாம்.




