உக்ரைனின் இராணுவத் தளபதி ஓலெக்சாண்டர் சிர்ஸ்கியை அந்நாட்டு ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கி பதவி நீக்கம் செய்துள்ளார்.
உக்ரைனின் பாதுகாப்பு அமைச்சர் மைக்கைலோ ஃபெடோரோவ் பதவி நீக்கம் செய்யப்பட்ட சில தினங்களுக்கு பின் இராணுவ தளபதியை உக்ரைன் ஜனாதிபதி பதவி நீக்கம் செய்திருக்கிறார்.
பதவி நீக்கம் செய்யப்பட்ட இராணுவ தளபதி சிர்ஸ்கியின் இடத்திற்கு முன்னணி ஜெனராலான மைக்கைலோ டிராபதி நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தமது முகநூல் பதிவில், ‘நான் பொறுப்புடனும், முழு கவனத்துடனும், நாட்டைப் பாதுகாக்கும் பணியை மரியாதையுடன் முன்னெடுப்பேன்’ எனத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ஸெலென்ஸ்கி சமூக ஊடக காணொளி பதிவொன்றில், 2022 இல் ரஷ்யா முழு அளவிலான போரைத் தொடங்கிய ஆரம்ப நாட்களில் தலைநகர் கீயூவை வெற்றிகரமாக பாதுகாப்பதில் சிர்ஸ்கியின் பங்கு உட்பட அவரது பணிகளுக்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை ரஷ்யாவின் மிகப்பெரிய இணைய சேவை சில்லறை விற்பனையாளருக்கு சொந்தமான களஞ்சியங்கள் மீது உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலில் 15 பேர் காயமடைந்துள்ளனர். கிராஸ்னோடர் மற்றும் ஸ்டாவ்ரோபோல் பிராந்தியங்களில் உள்ள வைல்ட்பெர்ரிகளுக்கு சொந்தமான தளவாட மையங்கள் இத்தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுள்ளன,
உக்ரைன் கடந்த நான்கு நாட்களில் இரண்டாவது தடவையாக இந்த இணைய சேவை நிறுவனத்தின் களஞ்சியங்கள் மீது தாக்கியுள்ளன. கடந்த சனிக்கிழமையன்று தம்போவ் மற்றும் எலெக்ட்ரோஸ்டலில் உள்ள களஞ்சியங்கள் தாக்கப்பட்ட போது எட்டு பேர் கொல்லப்பட்டதோடு 62 பேர் காயமடைந்தமை தெரிந்ததே.பி.பி.சி




