இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஆடுவதற்காக இலங்கை வரும் இந்திய அணி அந்த தொடருக்கு முன்னர் கொழும்பு, என்.சி.சி. மைதானத்தில் நான்கு நாள் பயிற்சிப் போட்டி ஒன்றில் ஆடவுள்ளது.
இந்த போட்டி அட்டவணையின்படி டெஸ்ட் தொடருக்கு தயாராகும் வகையில் எதிர்வரும் ஓகஸ்ட் 7 தொடக்கம் 10 ஆம் திகதி வரை இந்தப் பயிற்சிப் போட்டியில் இந்திய அணி ஆடவுள்ளது. இதனைத் தொடர்ந்து காலி செல்லும் இந்திய அணி இலங்கையுடனான முதலாவது டெஸ்ட் போட்டியில் ஆடும். காலி சர்வதேச கிரிக்கெட் அரங்கில் எதிர்வரும் ஓகஸ்ட் 15 தொடக்கம் 19 ஆம் திகதி வரை முதல் டெஸ்ட் போட்டி நடைபெறவுள்ளது.
இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஓகஸ்ட் 23 தொடக்கம் 27 ஆம் திகதி வரை கொழும்பு, எஸ்.எஸ்.சி. மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த இரண்டு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடர் 2025–2027 ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்சிப் பருவத்தின் ஓர் அங்கமாகவே இடம்பெறுகிறது. உலக டெஸ்ட் சம்பியன்சிப் புள்ளிப் பட்டியலில் தற்போது இந்திய அணி 5 ஆவது இடத்திலும் இலங்கை ஆறாவது இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் டெஸ்ட் தொடர் ஒன்றில் ஆடுவதற்காக இந்திய அணி இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொள்வது கடந்த ஒன்பது ஆண்டுகளில் இது முதல் முறையாக அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.




