டெங்கு பரவுவதை கட்டுப்படுத்த நாளை முதல் கூட்டு செயற்றிட்டம்

2 Min Read
  • இதுவரை 48 மரணங்கள், 69,951 பேருக்குதொற்று, 14,572 அடையாளம் காணல்
  • ஒவ்வொரு சுகாதார வைத்திய அதிகாரிபிரிவிலும் தலா பத்து குழுக்கள்

டெங்கு பரவுவது தீவிரமடைந்து வருவதால், முப்படையினர் மற்றும் காவல்துறையினரின் பங்களிப்புடன் புதிய விசேட கூட்டு ஒழிப்பு செயற்றிட்டம் நாளை வியாழக்கிழமை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் தற்காலிக பணிப்பாளர் வைத்தியர் கபில கன்னங்கர தெரிவித்துள்ளார்.

நாட்டில் இதுவரையான காலப்பகுதியில் மொத்தம் 69,951 டெங்கு தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதுடன், இம்மாதத்தில் மாத்திரம் இதுவரையில் 14,572 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்துடன், டெங்கு தொற்று காரணமாக இதுவரையில் 48 மரணங்கள் சம்பவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது மேல் மாகாணத்திலேயே அதிகளவிலான தொற்றாளர்கள் பதிவாகி வருகின்றனர். ஆரம்ப காலகட்டத்தில் கொழும்பு மாவட்டத்திலேயே அதிக பாதிப்பு காணப்பட்டிருந்தது.தற்போதைய நிலவரப்படி கம்பஹா மாவட்டத்தில் டெங்கு தொற்றுவது அதிகரித்துள்ளது.

சதவீத அடிப்படையில் கம்பஹா மாவட்டத்தில் 20.6 சதவீதத்தினரும், கொழும்பு மாவட்டத்தில் 20.2 சதவீதத்தினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வீதத்திற்கு மேலதிகமாக களுத்துறை, கொழும்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகள் மற்றும் தென் மாகாணத்தில் மாத்தறை, காலி ஆகிய மாவட்டங்களிலும் பாதிப்புகள் இனங்காணப்பட்டுள்ளன.
இருந்த போதிலும், சில மாவட்டங்களில் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் ஓரளவு குறைவு தென்படுவதாக அவர் விவரித்துள்ளார்.

இந்நிலையில், டெங்கு பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக வரும் வியாழக்கிழமை முதல் ‘தூய்மையான இலங்கை’ (Clean Sri Lanka) திட்டத்துடன் இணைந்து, சுகாதார அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு, முப்படையினர், காவல்துறை மற்றும் இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் ஆகியவற்றின் தொண்டர்களின் பங்களிப்புடன் புதிய வீரியத்துடன் விசேட ஒழிப்பு செயற்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இந்த முதற்கட்ட வேலைத்திட்டம் 11 மாவட்டங்களில் உள்ள 60 சுகாதார வைத்திய அதிகாரி (MOH) பிரிவுகளை இலக்காகக் கொண்டு ஒரு வார காலத்திற்கு தீவிரமாக நடத்தப்படும்.

ஒவ்வொரு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்கும் தலா 10 குழுக்கள் வீதம் நிறுத்தப்பட்டு, வீடுகள் மற்றும் பொது இடங்கள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படும். ஒரு வார காலத்தின் பின்னர் இதன் முன்னேற்றம் குறித்து மீளாய்வு செய்யப்பட்டு, அடுத்தகட்ட நடவடிக்கைகள் தீர்மானிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.கள விஜயங்களை மேற்கொள்ளும் பரிசோதனைக் குழுக்களுக்கு பொதுமக்கள் தங்களது முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்று வைத்தியர் கபில கன்னங்கர அவசர வேண்டுகோள் விடுத்துள்ளார். அத்தியாவசியத் தேவைகளுக்காக நீரைச் சேமித்து வைப்பதாக இருந்தால், அதில் கொசுக்கள் முட்டையிடாதவாறு முறையாக மூடி வைக்க வேண்டும் அல்லது அவற்றை அகற்ற வேண்டும்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *