இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டி20 சர்வதேச போட்டியிலும் தோல்வியுற்று ஐந்து போட்டிகளைக் கொண்ட தொடரை 4–0 என்ற கணக்கில் முழுமையாக இழந்த இந்திய அணி ஐ.சி.சி. டி20 தரவரிசையிலும் முதல் இடத்தை இழந்துள்ளது.
சௌதம்டனில் நேற்று முன்தினம் (11) நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணிக்கு ஜோஷ் பட்லர் 64 பந்துகளில் 131 ஓட்டங்களைப் பெற்றார். இதன்போது அவர் அணித் தலைவர் ஹரி புரூக்குடன் (அட்டமிழக்காது 95) இணைந்து இரண்டாவது விக்கெட்டுக்கு 233 ஓட்டங்களைப் பகிர்ந்து கொண்டார்.
இதன்மூலம் இங்கிலாந்து அணி 230 ஓவர்களுக்கும் 3 விக்கெட்டுகளை இழந்து 257 ஓட்டங்களைப் பெற்றது. தொடர்ந்து பதிலெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 201 ஓட்டங்களையே குவித்தது. இந்திய அணி கடந்த மார்ச் மாதத்தில் டி20 உலகக் கிண்ணத்தை வென்ற பின்னர் தொடர்ச்சியாக ஏழு டி20 போட்டிகளில் வெற்றி பெறத் தவறியுள்ளது. முன்னதாக நடைபெற்ற அயர்லாந்துக்கு எதிரான இரண்டு போட்டிகளைக் கொண்ட டி20 தொடரையும் இந்தியா 0–2 என இழந்தது.
இதனையடுத்து இந்திய அணி டி20 தரவரிசையில் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டதோடு இரண்டாவது இடத்தில் இருந்த இங்கிலாந்து அணி முதல் இடத்திற்கு முன்னேற்றம் கண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




