தென்கிழக்கு சீனாவின் புகழ்பெற்ற தொழில் நகரமான ஜின்ஜியாங்கில் (Jinjiang) அமைந்துள்ள பிரம்மாண்டமான காலணித் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்தில் சிக்கி, குறைந்தது 28 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் என அந்நாட்டின் உத்தியோகபூர்வ அரச செய்தி நிறுவனமான சின்ஹுவா (Xinhua) அறிவித்துள்ளது.
தொழிற்சாலைக் கட்டடத்திலிருந்து கரும்புகை வானுயரத்திற்கு எழும்புவதும், தொழிலாளர்கள் சிலர் தப்பிப்பதற்காகக் கட்டடத்தின் கூரை மீது தஞ்சம் புகுந்து தவிப்பதுமான நெஞ்சை உலுக்கும் நேரடி வீடியோ காட்சிகள் சீன ஊடகங்களில் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
சீனாவின் புஜியான் (Fujian) மாகாணத்தில் அமைந்துள்ள ஜின்ஜியாங் நகரம், “சீனாவின் காலணித் தலைநகரம்” (China’s Shoe Capital) என்று உலகளவில் அழைக்கப்படுகிறது. உலகின் ஒட்டுமொத்த விளையாட்டு உதிரிப் பாகங்கள் மற்றும் ஸ்போர்ட்ஸ் காலணிகளில் (Sports Shoes) 20 சதவீதத்தை இந்த ஒரு நகரம் மட்டுமே உற்பத்தி செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இங்குள்ள புகழ்பெற்ற ‘ஹுய்டெங் ஃபுட்வேர்’ (Huiteng Footwear) என்ற காலணித் தொழிற்சாலையிலேயே உள்ளூர் நேரப்படி நேற்று (09) நண்பகல் 12.00 மணியளவில் (05:00 BST) இந்த எதிர்பாராத தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தொழிற்சாலையில் தீப்பற்றியதும் அங்கு கடமையில் இருந்த 200 இற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அவசர அவசரமாகப் பாதுகாப்புப் படையினரால் வெளியேற்றப்பட்டனர். எனினும், காயமடைந்தவர்களின் துல்லியமான எண்ணிக்கை இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.
தீயைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்கும், கட்டடத்திற்குள் சிக்கியவர்களை மீட்பதற்கும் 500 இற்கும் மேற்பட்ட அதிநவீன மீட்புப் பணியாளர்கள் மற்றும் நூற்றுக்கணக்கான தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்தில் உடனடியாகக் குவிக்கப்பட்டன.




