கமெனேயின் இறுதி ஊர்வலத்திற்கு மத்தியில் ஹோர்மூஸில் பதற்றம்

3 Min Read

ஹோர்முஸ் நீரிணையில் இரு கப்பல்கள் தாக்கப்பட்டதோடு போரை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது தொடர்ச்சியான எச்சரிக்கையை நிறுத்தாத பட்சத்தில் அமைத்திப் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படமாட்டாது என்று ஈரான் எச்சரித்துள்ளது. மறைந்த ஈரான் உயர்மட்ட தலைவரின் இறுதிச் சடங்கு ஊர்வலத்தில் இலட்சக்கணக்கான மக்கள் திரண்டு அஞ்சலி செலுத்தி வரும் நிலையிலேயே ஈரான் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

கட்டாரின் திரவ எரிவாயு கப்பலான அல் ரகய்யத் கடந்த திங்கள் இரவு தாக்குதலுக்கு இலக்காகி இருப்பதோடு அதன் எஞ்சின் அறை தீப்பிடித்துள்ளது. அதேபோன்ற தாக்குதல் ஒன்றில் சவூதி மசகு எண்ணெய் கப்பல் ஒன்றும் சேதம் அடைந்திருப்பதாக கடல்சார் பாதுகாப்பு மூலங்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது.

ஆளில்லா விமானத் தாக்குதல் ஒன்றே நடத்தப்பட்டிருப்பதாகவும் கப்பலில் இருந்த பணியாளர்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும் அந்தக் கப்பலின் கெப்டன் குறிப்பிட்டதாக ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. எஞ்சின் இன்றி கப்பல் செயலிழந்திருப்பதோடு அவர் உதவிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த தாக்குதல்களுக்கு எவரும் பொறுப்பேற்கவில்லை. எனினும் இரு கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாக எக்சியோஸ் செய்தித் தளம் குறிப்பிட்டுள்ளது. இது பற்றி ஈரான் அல்லது அமெரிக்கா எந்த பதிலையும் வெளியிடவில்லை.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட ஈரான் உயர்மட்ட தலைவரின் இறுதிச் சடங்கு ஆரம்பித்த பின்னர் முதல் முறையாகவே இவ்வாறான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரானுக்கு எதிராக போர் தொடுத்து நான்கு மாதங்கள் கடந்திருந்தபோதும் தீர்க்கமான எரிபொருள் விநியோக கடல் பாதையாக இருக்கும் ஹோர்முஸ் நீரிணையை யொட்டி பிரச்சினை இன்னும் தீர்க்கப்படவில்லை என்பதை இந்தத் தாக்குதல்கள் காண்பிக்கின்றன.

போர் ஆரம்பித்த பின்னர் இந்த நீரிணையை முடக்கிய ஈரான் தொடர்ந்து அதன் கட்டுப்பாட்டை தன்னகத்தே வைத்துள்ளது. இதில் பயணிக்கும் கப்பல்கள் மீது கட்டணம் அறவிடும் முறை ஒன்றை செயற்படுத்துவதற்கு ஈரான் திட்டமிட்டு வருகிறது. இது பிராந்தியத்தில் அமெரிக்காவின் செல்வாக்கை குறைத்து அதிகார சமநிலையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

மறைந்த ஆயதொல்லா அலி கமெனேயின் ஒரு வார கால இறுதிக் கிரியை, ஈரான் தனது அதிகாரத்தை வலுப்படுத்துவதாக பார்க்கப்படுகிறது. போர் ஆரம்பித்த முதல் தினத்தில் நடத்தப்பட்ட தாக்குதலிலேயே உயர்பட்டத் தலைவர், அவரது மகள், பேரப்பிள்ளை, மருமகள் மற்றும் மருமகன் ஆகியோர் கொல்லப்பட்டனர்.

உயர்மட்டத் தலைவர் மற்றும் அவரது குடும்பத்தினரின் உடல்கள் வைக்கப்பட்ட சவப்பெட்டிகள் நேற்று ஈரானின் பிரதான மதக் கல்வி மையமாக இருக்கும் கோம் நகருக்கு எடுத்துவரப்பட்டது. அப்போது, இலட்சக்கணக்கான மக்கள் கொடிகள் மற்றும் பதாகைகளை ஏந்தியபடி கலந்து கொண்டனர். அவற்றில், கமெனேய், ஷியா இஸ்லாமியப் பிரிவின் அடித்தளமாகக் கருதப்படும் தியாகிகளுடன் ஒப்பிட்டு புகழப்பட்டார்.

முழக்கங்களின் மூலம் அவர்கள் கமெனேயின் மரணத்திற்குப் பழிவாங்குவதாக உறுதியளித்தனர். சிலர் ‘டிரம்ப் ஒழிக’ என்று எழுதப்பட்ட பதாகைகள் மற்றும் பலகைகளை ஏந்தியிருந்தனர்.

ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையே எட்டப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையை தொடர்ந்து போர் நிறுத்தப்பட்டுள்ளது. இரு தரப்பும் இறுதி உடன்படிக்கை ஒன்றை எட்டுவதற்கு 60 நாள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கான அமைதிப் பேச்சுவார்த்தைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த வாரம் கட்டாரில் இரு தரப்பும் மேற்கொண்ட மறைமுக பேச்சுவார்த்தைகளில் எந்த முன்னேற்றமும் எட்டப்பட்டவில்லை.

மறுபுறம் டிரம்ப் மீண்டும் தாக்குதல்களை ஆரம்பிப்பது குறித்து தொடர்ந்து எச்சரித்து வருகிறார். இதன் தொடர்ச்சியாக கடந்த திங்கட்கிழமை ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘நாம் ஒன்று உடன்பாட்டை எட்டப் போகிறோம்; இல்லையெனில் எஞ்சிய வேலையையும் முடித்துவிடப் போகிறோம். ஒரு மணி நேரத்திற்குள் அவர்களின் பாலங்களை இடித்துத் தகர்க்கவும், அவர்களின் மின்சார விநியோகத்தை முற்றிலும் செயலிழக்கச் செய்யவும் எங்களால் முடியும்”என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி கூறியதாவது, எச்சரிக்கைகள் தொடர்ந்தால் இடைக்கால போர் நிறுத்த உடன்படிக்கையின் விதிகளின் கீழ், இறுதி உடன்படிக்கைக்கான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட மாட்டாது’ என்று எச்சரித்தார்.

”நீங்கள் கையெழுத்திட்ட உடன்பாட்டை மதித்து நடந்து கொள்ளுங்கள்’ என்று அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *