பலாங்கொடைத் தேர்தல் தொகுதியிலே 1903 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதாக கூறப்படும் பலாங்கொடை இ/வித்தியாலோக்க மகா வித்தியாலயத்தின் பாரிய வளர்ச்சியினை நேரிலேயே அவதானித்த நான் அதிக அளவு மகிழ்ச்சி அடைகிறேன். இவ்வித்தியாலயத்தில் இலங்கையின் முதல் பெண் பிரதமரான மறைந்த ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க அம்மையாரும் கல்வி பயின்றுள்ளதாக இங்கு ஒரு மாணவி குறிப்பிட்டார். இந்த வித்தியாலயம் ஏற்பாடு செய்துள்ள பொருட்காட்சி நிகழ்வில் கலந்து கொள்ள கிடைத்தமை எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.”
கடந்த 04ஆம் திகதி பலாங்கொடை இ/வித்தியாலோக்க மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற பொருட்காட்சி கண்காட்சியினை திறந்து வைத்த பின்னர் இடம்பெற்ற கூட்டத்திலே உரையாற்றிய பிரதமரும் கல்வி உயர்கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய இவ்வாறு குறிப்பிட்டார்.
இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், நகர சபை பிரதேச சபை தலைவர் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பெற்றோர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் தொடர்ந்து பிரதமர் உரையாற்றுகையில் குறிப்பிட்டதாவது, இந்த வித்தியாலயத்தின் மாணவர்கள் இன்றைய காலத்திற்கு ஏற்ற வகையில் பொருட்காட்சியினை உருவாக்கி உள்ளனர். விவசாயம்- கமத்தொழில்-தொழில்நுட்பம்-விஞ்ஞானம் ஆகிய துறைகளை மையப்படுத்தி பொருட்காட்சியினை ஏற்பாடு செய்திருந்தமை பாராட்டுக்குரியது.
இந்த மகா வித்தியாலயத்தில் இட நெருக்கடி நிலவுவதாகவும் விளையாட்டு மைதானத்தின் முக்கியத்துவத்தையும் அதிபர் அவரது உரையில் எடுத்தியம்பினார். கல்வி அமைச்சர் என்ற ரீதியில் இந்த வித்தியாலயத்தின் குறைபாடுகளை இனம் கண்டு நிறைவேற்றி கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பிரதமர் ஹரிணி அமர சூரிய தெரிவித்தார்.




