பரஸ்பர தாக்குதல்களை நிறுத்துவதற்கு அமெரிக்கா – ஈரான் இடையே இணக்கம்

3 Min Read

ஹோர்முஸ் நீரிணை தொடர்பில் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே அண்மைய நாட்களாக இடம்பெற்ற பஸ்பர தாக்குதலை நிறுத்துவதற்கு இரு தரப்புக்கும் இடையே உடன்பாடு எட்டப்பட்டதாக அமெரிக்க அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது. இரு தரப்புக்கும் இடையே அண்மையில் எட்டப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையை தொடர்ந்து காப்பதற்கான வாய்ப்பு இதன்மூலம் அதிகரித்துள்ளது.

‘புரிந்துணர்வு உடன்படிக்கையின் அனைத்து அம்சங்கள் தொடர்பான தொழில்நுட்ப ரீதியான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து இடம்பெறும். இரு தரப்பும் தற்போது பின்வாங்கி இருப்பதோடு கப்பல்களுக்கு சுதந்திரமாக பயணிக்க முடியும்’ என்று அந்த அதிகாரி தெரிவித்துள்ளார். கடந்த ஜூன் 17 ஆம் திகதி கைச்சாத்தான மேற்படி உடன்படிக்கையில் நீரிணை மீண்டும் திறக்கப்படும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் எக்சியோஸ் செய்தி நிறுவனமே மோதலை நிறுத்தும் முதல் அறிவிப்பை வெளியிட்டிருந்தது. அமெரிக்க அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி வெளியான அந்த செய்தியில், கட்டாரில் இன்று (30) இரு தரப்பு பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

ஹோர்முஸ் நீரிணையில் பயணித்த சரக்கு கப்பல் ஒன்றின் மீது ஈரான் கடந்த வியாழக்கிழமை தாக்குதல் நடத்தியதை அடுத்தே கடந்த சில நாட்களாக மோதல் தீவிரம் அடைந்தது. இதன்போது இடைக்கால உடன்படிக்கையை மீறியதாக அமெரிக்கா மற்றும் ஈரான் மாறி மாறி குற்றம் சுமத்தியமை குறிப்பிடத்தக்கது.

ஈரான் போரை முடிவுக்குக் கொண்டுவர இணங்கா விட்டால் அந்த நாட்டை அழிப்பதாக அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சமூக ஊடகத்தில் மீண்டும் ஒருமுறை எச்சரிக்கை விடுத்த விரைவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை குவைட் மற்றும் பஹ்ரைனில் இருக்கும் அமெரிக்க தளங்கள் மீது ஈரான் ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல்களை நடத்தி இருந்தது.

குறிப்பாக சர்வதேச எரிபொருள் விநியோகத்தில் 20 வீத பங்கு வகிக்கும் குறுகலான கடல்வழிப் பாதையான ஹோர்முஸ் நீரிணையை கட்டுப்படுத்துவது தொடர்பிலேயே ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே அண்மைய மோதல்கள் தீவிரம் அடைவதற்கு காரணமாகும். நீரிணையின் ஓமான் கடற்கரையை ஒட்டிய தெற்கு பாதையை பயன்படுத்த கப்பல்களுக்கு அமெரிக்கா அறிவுறுத்தும் நிலையில், நீரிணையின் வடக்குப் பாதையை பயன்படுத்த ஈரான் அறிவுறுத்தி வருகிறது.

ஈராக் பயணித்திருக்கும் ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘ஈரான் அடுத்த 30 நாட்களுக்கு இந்த முக்கிய கடல் பாதையின் முழுமையான நிர்வாக மற்றும் கண்காணிப்பை தனிப்பட்ட முறையில் மேற்கொள்ளும்;. அதன் பின்னர் முழுமையான கப்பல் போக்குவரத்து மீண்டும் இயல்பாக அனுமதிக்கப்படும்’ என்று விலியுறுத்தியுள்ளார்.

இந்த கடற்பாதையில் தாம் அறிவித்திருக்கும் வழியை புறக்கணித்து மாற்று வழியை பயன்படுத்த முயற்சித்தால் அது பதற்றத்தையும் மோதலையும் தீவிரப்படுத்தும் என்றும் எச்சரித்தார். அத்துடன் எட்டப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையின் முதலாவது உறுப்புரையையும் அவர் வலியுறுத்திக் கூறினார். அதில் லெபனான் உட்பட அனைத்து முனைகளிலும் இராணுவ நடவடிக்கைகள் உடனடியாகவும் நிரந்தமாகவும் நிறுத்தப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில் தெற்கு லெபனானில் தொடரும் இஸ்ரேலின் தாக்குதல்களை நிறுத்த இஸ்ரேலுக்கு அமெரிக்கா அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அமெரிக்காவின் மத்தியஸ்தத்துடன் இஸ்ரேல் மற்றும் லெபனான் அரசுகள் அடிப்படை ஒப்பந்தம் ஒன்றில் கடந்த வெள்ளிக்கிழமை கைச்சாத்திட்டபோதும் அதில் ஹிஸ்புல்லா அமைப்பு முழுமையாக ஆயுதங்களை களையும் வரை இஸ்ரேலியப் படை லெபனானில் தொடர்ந்து நிலைகொள்வதற்கு அனுமதி அளித்துள்ளது. இதனை ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா அமைப்பு நிராகரித்துள்ளது. இஸ்ரேலுடனான இந்த உடன்படிக்கையை பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கும் அதனை செயற்படுத்துவதற்கும் அனுமதிக்கப்போவதில்லை என்று லெபனான் பாராளுமன்ற சபாநாயகர் நபிஹ் பெரி குறிப்பிட்டிருப்பதோடு இந்த உடன்படிக்கை லெபனானின் உரிமையை உறுதி செய்யவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தெற்கு லெபனானில் மூன்று ஹிஸ்புல்லா தலைமையகங்களை தாக்கியதாக இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டுள்ளது. நபட்டியே மற்றும் மைபதூன் பகுதியில் இருக்கும் ஹிஸ்புல்லா நிலைகள் மீதே கடந்த ஞாயிறு இரவு தாக்குதல் நடத்தியதாக அது கூறியது.

மறுபுறம் போர் நிறுத்தத்தை மீறி காசாவிலும் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருதோடு மத்திய காசாவின் டெயிர் அல் பலாஹ்வில் நேற்றுக் காலை இடம்பெற்ற இஸ்ரேலின் ஆளில்லா விமானத் தாக்குதலில் 8 வயது சிறுவன் உட்பட மூன்று பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். வதி சல்கா பாலத்திற்கு அருகே இடம்பெற்ற இந்தத் தாக்குதலில் மேலும் பலர் காயமடைந்திருப்பதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா குறிப்பிட்டுள்ளது.

இந்த தாக்குதலுடன் கடந்த ஆண்டு ஒக்டோபரில் காசாவில் எட்டப்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கைக்குப் பின்னர் அங்கு இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 1,048 ஆக அதிகரித்துள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *