ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி தலைமையில் உயர்மட்டக் கூட்டம்

1 Min Read

இந்திய நிதியுதவியின் கீழ் மலையக மக்களுக்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள 4700 வீடுகளை நிர்மாணிக்கும் திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஆராயும் கலந்துரையாடல், ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தியின் தலைமையில் நேற்றுமுன்தினம் (24) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

வீட்டுத் திட்டத்தின் கீழ், தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தினால், அனர்த்த அபாயம் உள்ளதாக அடையாளம் காணப்பட்ட குடும்பங்களுக்கு 2026 வீடுகள் வழங்கப்படவுள்ளதுடன், ஏனைய வீடுகள் அடையாளம் காணப்பட்ட பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்குவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இதன்படி, 22 பிராந்திய பெருந்தோட்ட நிறுவனங்கள் மற்றும் அரச பெருந்தோட்டக் கூட்டுத்தாபனம், ஜனவசம மற்றும் எல்கடுவ ஆகிய பெருந்தோட்ட நிறுவனங்களுக்குச் சொந்தமான தோட்டங்களில் வசிக்கும் மலையக மக்களுக்காக இவ்வீடுகள் வழங்கப்படவுள்ளன. ஒரு வீட்டை நிர்மாணிப்பதற்காக இந்திய அரசாங்கம் 28 இலட்சம் ரூபாவையும், இலங்கை அரசாங்கம் 04 இலட்சம் ரூபாவையும் ஒதுக்கியுள்ளன.

வீட்டுத் திட்டத்தின் பணிகளை இவ்வருட இறுதிக்குள் நிறைவு செய்யுமாறு இங்கு அதிகாரிகளுக்கு அறிவுறுத்திய பிரபாத் சந்திரகீர்த்தி, வீடுகள் நிர்மாணிக்கப்பட முன்மொழியப்பட்டுள்ள காணிகளை விரைவாக விடுவிக்குமாறும், பொருத்தமான காணிகளை அடையாளம் காண்பதற்குத் தேவையான அறிக்கைகளை வழங்குமாறு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்திற்கும் அவர் மேலும் அறிவுறுத்தல் வழங்கினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *