போதைப் பொருள் வர்த்தகத்துடன் சம்பந்தப்பட்ட பெரும்பாலானவர்களை குறுகிய காலத்தில் கைது செய்ய முடிந்துள்ளதாகவும் போதைப்பொருள், குற்றச் செயல்கள் ஒழிப்புக்காக அரசாங்கம் தம்மை முழுமையாக அர்ப்பணித்துள்ளதாகவும் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல் ராஜ் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். எமது அரசாங்கம் எந்த காரணத்துக்காகவும் குற்றவாளிகளை ஒருபோதும் பாதுகாக்காது என தெரிவித்த அமைச்சர், சட்டத்தை முறையாக நடைமுறைப்படுத்துவதில் முன்னுதாரணமான அரசாங்கமாக திகழ்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். விவாதத்தில் தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர், அரசியல்வாதிகள் என்ற ரீதியில் எந்த சந்தர்ப்பத்திலும் நாம் அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்ததில்லை என்பதுடன் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் சுயாதீனம் வழங்கப்பட்டுள்ளது. சட்டத்தை நிறைவேற்றுகின்ற அதிகாரிகள் மற்றும் நிறுவனங்களுக்கு அனைத்து வசதிகளையும் அரசாங்கம் பெற்றுக் கொடுத்துள்ளது. போதைப் பொருள் பாவனை உலகளவில் அதிகரித்து வரும் நிலையில் எமது நாட்டிலும் அது வேகமாக அதிகரித்து வருகிறது.




