வெனிசூலாவை உலுக்கிய இரட்டை நிலநடுக்கங்கள்!

1 Min Read

தென் அமெரிக்க நாடான வெனிசூலாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் அந்நாடு பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.

தலைநகர் கராகஸில் (Caracas) உள்ள பல கட்டடங்கள் இந்த நிலநடுக்கத்தின் தாக்கத்தால் இடிந்து விழுந்துள்ளதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையத்தின் (USGS) தரவுகளின்படி, நேற்றையதினம் (24) இரவு 10.04 மணியளவில் முதலாவது நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.2 ஆகப் பதிவாகியுள்ளது. இது நாட்டின் கரீபியன் கடற்கரை ஓரமாக அமைந்துள்ள மொரோன் (Moron) பகுதிக்கு மேற்கே சுமார் 168 கிலோமீற்றர் தொலைவில் மையம் கொண்டிருந்ததுடன், 22 கிலோமீற்றர் ஆழத்தில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.

இந்த முதலாவது நிலநடுக்கம் ஏற்பட்டுச் சரியாக ஒரே ஒரு நிமிட இடைவெளியில், ரிக்டர் அளவில் 7.5 ஆகப் பதிவான மற்றுமொரு பாரிய நிலநடுக்கம் அதே மொரோன் பகுதிக்கு தென்மேற்கே 16 கிலோமீற்றர் தொலைவில் தாக்கியுள்ளது. இது நிலப்பரப்பிலிருந்து வெறும் 10 கிலோமீற்றர் ஆழத்திலேயே மையம் கொண்டிருந்ததால், இதன் தாக்கம் மிகக் கடுமையாக இருந்ததாகக் கூறப்படுகிறது.

தொடர்ச்சியாகத் தாக்கிய இந்த இரட்டை நிலநடுக்கங்களால் தலைநகர் கராகஸில் வசிக்கும் மக்கள் அச்சத்தில் வீதிகளில் தஞ்சமடைந்துள்ளனர். பல கட்டடங்கள் இடிந்து வீழ்ந்துள்ள நிலையில், மீட்புப் பணிகள் மற்றும் சேத விபரங்கள் குறித்த நேரடித் தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *