ஆபிரிக்காவில் உள்ள கனிம வளங்களை வெறும் மூலப்பொருளாக ஏற்றுமதி செய்யாமல், அங்கேயே அவற்றைச் சுத்திகரித்து, உற்பத்திப் பொருட்களாக மாற்றும் இந்தியாவின் “பெறுமதி சேர் மற்றும் உற்பத்தி சார்ந்த” முதலீட்டு அணுகுமுறை, உலக அரங்கில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
மேற்கத்திய நாடுகள் மற்றும் சீனாவின் பாரம்பரிய சுரண்டல் உத்திகளுக்கு மாற்றாக, ஆபிரிக்க நாடுகள் தங்களின் கனிம வளப் பொருளாதாரத்தில் அடுத்த கட்டத்திற்குச் செல்ல இந்த உத்தி பெரும் துணையாக இருக்கும் என்று சர்வதேச நிபுணர்கள் கருதுகின்றனர்.
உலகில் உள்ள ஒட்டுமொத்த முக்கியமான கனிம இருப்புக்களில் சுமார் 30 சதவீதத்தை ஆப்பிரிக்கக் கண்டம் தன்னுள் கொண்டுள்ளது. மின்சார வாகனங்கள் , புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் நவீன தொழில்நுட்பங்களுக்குத் தேவையான பிளாட்டினம், மாங்கனீசு, வனேடியம், லித்தியம் மற்றும் தாமிரம் போன்ற கனிமங்கள் இதில் அடங்கும்.
இருப்பினும், பல தசாப்தங்களாக ஆபிரிக்க நாடுகள் இந்த தாதுக்களை கச்சாப் பொருட்களாகவே ஏற்றுமதி செய்து வந்தன. இதனால் உள்நாட்டில் வேலைவாய்ப்புகளோ அல்லது போதிய பொருளாதார வளர்ச்சியோ ஏற்படவில்லை.
ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா, சீனா போன்ற நாடுகள் ஆப்பிரிக்காவின் கனிமங்களை நேரடியாகத் தங்கள் நாடுகளுக்குக் கொண்டு செல்வதிலேயே கவனம் செலுத்துகின்றன. ஆனால், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வழிகாட்டுதலின்படி, இந்தியா “ஆப்பிரிக்காவுடன் இணைந்து வளருதல்” என்ற கொள்கையைக் கடைப்பிடிக்கிறது.
இந்த உத்தியின் ஒரு பகுதியாக, அண்மையில் தென்னாப்பிரிக்காவின் துணை ஜனாதிபதி பால் மஷாதிலே (Paul Mashatile) இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டார். இதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையே பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
இரு நாடுகளின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறைகளை ஒன்றிணைத்து கூட்டு உற்பத்தி மற்றும் சந்தை வாய்ப்புகளை உருவாக்குதல், ஆபிரிக்க சந்தைக்காக உள்நாட்டிலேயே தடுப்பூசிகள் மற்றும் மருந்துகளைத் தயாரிக்கும் இரண்டு கூட்டுத் திட்டங்களை உருவாக்குதல், பசுமை ஹைட்ரஜன், சூரியசக்தி மற்றும் எலக்ட்ரிக் வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பில் இந்திய நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்த்தல் தொடர்பில் முடிவுகள் எடுக்கப்பட்டன.
இந்தியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுக்கு இடையிலான இந்த வர்த்தக உறவு வெறும் இறக்குமதி-ஏற்றுமதியோடு நின்றுவிடாமல், ஆபிரிக்காவின் தொழிற்துறை மறுமலர்ச்சிக்கும், இந்தியாவின் தூய்மையான ஆற்றல் மற்றும் விநியோகச் சங்கிலிப் பாதுகாப்பிற்கும் ஒரு பாலமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.




