ஈரானுடனான போரை முடிவுக்குக் கொண்டுவரும் ஆரம்பக்கட்ட உடன்படிக்கை ஏற்கனவே கைச்சாத்திடப்பட்டு விட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ள நிலையில், அந்த உடன்படிக்கையை எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்கு முன்னர் வெளியிட அவர் தீர்மானித்திருப்பதாக அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான ஒன்றைரைப் பக்கங்கள் கொண்ட இந்த புரிந்துணர்வு உடன்படிக்கை ‘ஒரு பொதுவான ஆவணம்’ என்று வான்ஸ் விபரித்துள்ளார். இந்த உடன்படிக்கையில் அடங்கியுள்ள சில விடயங்கள் குறித்து அமெரிக்க சிரேஷ்ட அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர். ஜெனீவாவில் இந்த உடன்படிக்கை எதிர்வரும் வெள்ளிக்கிழமை (19) கைச்சாத்தாகும் தினத்திலேயே ஹோர்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
டொனால்ட் டிரம்ப் பிரான்சில் நடைபெறும் ஜி7 மாநாட்டில் கலந்து கொண்டிருப்பதோடு அந்த மாநாட்டின்போது ஈரான் தொடர்பிலும் சிறப்பு அமர்வொன்று நடத்தப்படுகிறது. அதில் எகிப்து, கட்டார் மற்றும் ஐக்கிய அரபு இராச்சிய தலைவர்களும் பங்கேற்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பிரான்ஸ் ஜனாதிபதி எமானுவேல் மெக்ரோனை கடந்த திங்களன்று சந்தித்துப் பேசிய டிரம்ப், ‘அந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுவிட்டது என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறேன். ஒப்பந்தம் முழுமையாக இறுதி செய்யப்பட்டு கையெழுத்திடப்பட்டுள்ளது’ என்று குறிப்பிட்டார். ஈரானுடனான ஆரம்பக்கட்ட உடன்படிக்கையையே அவர் இவ்வாறு குறிப்பட்டிருந்தார்.
அந்த உடன்படிக்கையில் டிரம்ப், வான்ஸ் மற்றும் ஈரான் பாராளுமன்ற சபாநாயகர் முஹமது பகர் கலிபப் ஆகியோர் மின்னணு முறையில் கையெழுத்திட்டிருப்பதாக அமெரிக்க அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
ஈரானின் அணுத் திட்டம் குறித்த தொழில்நுட்ப ரீதியான பேச்சுவார்த்தைகள் இந்த வாரத்தில் ஆரம்பிக்கும் என்று எதிர்பார்ப்பதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். ஒப்பந்தத்தின் கீழ் ஈரான் தனது உறுதிப்பாடுகளை நிறைவேற்றினால் மட்டுமே, அதன் மீது விதிக்கப்பட்டுள்ள தடைகள் தளர்த்தப்படுவது மற்றும் முடக்கப்பட்டுள்ள சொத்துக்கள் விடுவிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை நிகழ்வுக்கு பின்னர் அந்த உடன்படிக்கை விரைவாக வெளியிடப்படும் என்று டிரம்ப் முன்னதாக குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் ‘பொக்ஸ் நியூஸ்’ தொலைக்காட்சிக்கு பேசிய வான்ஸ், அதற்கு முன்னரே ஈரானுடனான உடன்படிக்கை தொடர்பான விபரத்தை வெளியிட டிரம்ப் தீர்மானித்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஒப்பந்தம் பொதுவான ஒன்றாக இருப்பதோடு எதிர்கால பேச்சுவார்த்தைகள் மூலமே விபரங்கள் சேர்க்கப்படவுள்ளன என்று வான்ஸ் முன்னதாக சி.என்.என். தொலைக்காட்சிக்கு கூறி இருந்தார்.
‘சில விடயங்களில், தொழில்நுட்ப பேச்சுவார்த்தை கட்டத்தில் தான் விபரங்களைத் தீர்மானிக்க வேண்டியிருக்கும். ஆனால் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் உருவாக்கும் கட்டமைப்பின் மூலம், ஒப்பந்தத்தின் கீழ் ஈரான் தனது கடமைகளை நிறைவேற்றினால், அதற்கான பலன்களைப் பெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது’ என்றார்.
ஆவணத்தின் ‘முதல் பந்தியில்’, ஈரான் ‘பிராந்திய அமைதி மற்றும் நிலைத்தன்மையை காக்க உறுதி அளிக்கும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது என்று வான்ஸ் கூறினார். அதில் ‘தீவிரவாத அமைப்புகளுக்கு’ நிதியளிப்பதை நிறுத்துவதும் அடங்கும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
‘மிக முக்கியமாக, அவர்கள் அணு ஆயுதம் உருவாக்கமாட்டோம் என்பதற்கு சரிபார்க்கக்கூடிய உறுதிப்பாட்டை வழங்க வேண்டும்’ என்று வான்ஸ் குறிப்பட்டார்.
ஈரானுடனான போர் நிறுத்த உடன்படிக்கையில் லெபனானும் உள்ளடக்கப்பட்டிருந்தபோதும் லெபானில் இருந்து இஸ்ரேலிய துருப்புகள் வாபஸ் பெறுவதற்கான நிபந்தனை விதிக்கப்படவில்லை என்று அமெரிக்க அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேல் தனது தற்பாதுகாப்பு உரிமையை தொடர்ந்து வைத்துள்ளது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இஸ்ரேலிய படைகள் தேவையான காலம் வரை லெபனான், சிரியா மற்றும் காசாவில் உள்ள பாதுகாப்பு வலயங்களில் தொடர்ந்து நிலைகொள்ளும் என்றும் தாக்குதல்களுக்கு எதிராக செயற்படும் சுதந்திரத்தை வைத்திருக்கும் என்றும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வலியுறுத்தியுள்ளார்.
கடந்த திங்கட்கிழமை செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர் உடன்படிக்கை மூலமாகவோ அல்லது உடன்படிக்கை இன்றியோ ஈரான் அணு ஆயுதங்களை பெறுவதற்கு அனுமதிக்கப்போவதில்லை என்றும் குறிப்பிட்டார்.
இந்த உடன்படிக்கை அறிவிப்பு வெளியான பின்னரும் தெற்கு லெபனானில் இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடர்வதோடு கார் ஒன்றை இலக்கு வைத்து இடம்பெற்ற தாக்குதலில் நால்வர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு பதிலடியாக இஸ்ரேலிய படைகள் மீது ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல்களை நடத்தியதாக ஹிஸ்புல்லா அமைப்பு குறிப்பிட்டுள்ளது. லெபனானில் இஸ்ரேல் சுமார் 570 சதுர கிலோமீற்றர் பகுதியை கைப்பற்றி இருப்பதோடு அங்கு நடத்தி வரும் தாக்குதல்களில் 3,000இற்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். குறிப்பாக இந்த போர்களில் லெபனான், சிரிய மற்றும் காசாவில் இஸ்ரேல் சுமார் 1,000 சதுர கிலோமீற்றர் நிலப்பகுதியை கைப்பற்றி இருக்கும் நிலையில் ஈரானுடனான உடன்படிக்கை இந்த நிலங்களை இழக்கும் நிலைக்கு தள்ளப்படக் கூடும் என்று இஸ்ரேலிய கடும்போக்காளர்கள் அஞ்சுகின்றனர்.



