இஸ்ரேலுக்கு எதிராக ‘பதிலடி’ கொடுப்பதற்கு ஈரான் எச்சரிக்கை

3 Min Read

லெபனான் உட்பட போரை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பில் அமெரிக்கா மற்றும ஈரான் இடையிலே புரிந்துணர்வு உடன்படிக்கை எட்டப்பட்டபோதும் இஸ்ரேல் லெபனான் மீது தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்தத் தாக்குதல்கள் தொடர்ந்தால் கடுமையான பதிலடி வழங்கப்படும் என்று ஈரான் எச்சரித்துள்ளது.

தெற்கு லெபனானின் பல இடங்களிலும் நேற்று இஸ்ரேல் வான் தாக்குதல்களை நடத்தியதாக லெபனான் அரச ஊடகம் குறிப்பிட்டுள்ளது. இஸ்ரேலிய போர் விமானங்கள் நபதியே அல்-ஃபவ்கா பகுதியையும், அதற்கு அருகாமையில் உள்ள கஃபார் தெப்னித் நகரின் கிழக்குப் புறநகர்ப் பகுதிகளையும் இலக்காகக் கொண்டு வான் தாக்குதல்களை நடத்தியதாக லெபனான் தேசிய செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. அன்சாரியே சிறு நகரிலும் இஸ்ரேல் ஆளில்லா விமானத் தாக்குதல்களை நடத்தி இருப்பதாகவும் அந்த செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

முன்னதாக கடந்த செவ்வாய்க் கிழமை தெற்கு லெபனானின் நபத்தியே நிர்வாகப் பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் நால்வர் கொல்லப்பட்டனர். இதன்போது இரு வாகனங்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களிலேயே உயிரிழப்புகள் இடம்பெற்றுள்ளன. சுகின் கிராமத்தில் மூன்றாவது வாகனம் ஒன்றும் இலக்கு வைக்கப்பட்டதாக லெபனான் தேசிய செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இவ்வாறான தாக்குதல்கள் தொடர்ந்து இடம்பெற்றால் இராணுவ ரீதியில் பதிலடி கொடுக்க வேண்டி ஏற்படும் என்று ஈரான் இராணுவம் எச்சரித்துள்ளது. அமெரிக்காவுடன் புரிந்துணர் எட்டப்பட்டது தொடக்கம் இஸ்ரேலியப் படை 84 தடவைகள் போர் நிறுத்தத்தை மீறி இருப்பதாக ஈரான் இராணுவம் கடந்த செவ்வாயன்று (16) வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.

அமெரிக்காவுடன் நீடித்த பேச்சுவார்த்தையின்போது லெபனானிலும் போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என்று ஈரான் வலியுறுத்தி வந்தது. இந்நிலையில் எட்டப்பட்டிருக்கும் புரிந்துணர்வு உடன்படிக்கையிலும் லெபனான் உள்ளடக்கப்பட்டிருப்பதாக மத்தியஸ்த நாடான பாகிஸ்தான் குறிப்பிட்டிருந்தது.

ஜெனிவாவில் நாளை (19) கைச்சாத்தாகவுள்ள அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவரும் புரிந்துணர்வு உடன்படிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள விபரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

எனினும் எட்டப்பட்டிருக்கும் உடன்படிக்கையின்படி லெபனானில் இருந்து இஸ்ரேல் வாபஸ் பெற வேண்டும் என ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி விலியுறுத்திள்ளார். டெஹ்ரானில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வெளிநாட்டு தூதுவர்களுடனான சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

‘லெபனானில் இஸ்ரேல் நடத்தும் எந்தவொரு இராணுவ தாக்குதலும் லெபனான் நிலத்தில் தொடரும் ஆக்கிரமிப்பும் இப்போதில் இருந்து புரிந்துணர்வு உடன்படிக்கையை மீறுவதாகக் கருதப்படும்’ என்று குறிப்பிட்டார். லெபனான் நிலத்தில் இருந்து இஸ்ரேலிய படைகள் முழுமையாக வாபஸ் பெறாவிட்டால், போருக்கு முழுமையான முடிவு ஏற்படாது என்று அராக்சி வலியுறுத்தினார்.

எவ்வாறாயினும் இஸ்ரேலிய படைகள் தேவையான காலம் வரை லெபனான், சிரியா மற்றும் காசாவில் உள்ள பாதுகாப்பு வலயங்களில் தொடர்ந்து நிலைகொள்ளும் என்றும் தாக்குதல்களுக்கு எதிரான செயற்படும் சுதந்திரத்தை வைத்திருக்கும் என்றும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு முன்னதாக குறிப்பிட்டிருந்தார்.

லெபனான் விவகாரம் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கையில் தொடர்ந்தும் சிக்கலை ஏற்படுத்தி வருகிறது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பும் லெபனானில் இஸ்ரேல் இராணுவத்தின் நடவடிக்கையை பொது வெளியில் மிக அரிதாக விமர்சித்திருந்தார். இஸ்ரேலிய இராணுவம் போராளிகளை இலக்கு வைத்து தேவையின்றி ஒட்டுமொத்த குடியிருப்பு கட்டடங்கள் மீது தக்குதல் நடத்துவதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

‘அதிகமான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஒருவரைத் தேடுகிறீர்கள் என்பதற்காக ஒவ்வொரு முறையும் ஒரு அடுக்குமாடி குடியிருப்பையே இடித்துத் தள்ள வேண்டிய அவசியமில்லை. ஏனெனில் அந்தக் கட்டிடங்களில் அதிகமான பொதுமக்கள் வசிக்கின்றனர்; அவர்கள் அனைவரும் ஹிஸ்புல்லா உறுப்பினர்கள் அல்ல’ என்று பிரான்சில் நடைபெற்ற ஜி7 மாநாட்டில் டிரம்ப் குறிப்பிட்டார்.

லெபனானில் தொடரும் மோதல் குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு மீது அண்மைய நாட்களாக அதிருப்தியை வெளியிட்டு வரும் நிலையிலேயே டிரம்ப் இந்தப் கருத்தை வெளியிட்டுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *