அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸுக்கு வடகிழக்கில் உள்ள எட்வர்ட்ஸ் விமானப்படைத் தளத்திலிருந்து நேற்று காலை புறப்பட்ட சிறிது நேரத்திலேயே பி-52 ரக குண்டுவீச்சு விமானம் விபத்துக்குள்ளானது. அதன் விளைவாக அவ்விமானத்தில் பயணித்த எட்டு பணியாளர்களும் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விபத்துக்குள்ளான பி-52 ஸ்ட்ராடோஃபோர்ட்ரஸ் விமானம், உள்ளூர் நேரப்படி காலை 11:20 மணிக்கு குறித்த விமானப்படைத் தளத்திலிருந்து சோதனைப் பணியின் நிமித்தம் புறப்பட்ட சொற்ப நேரத்தில் இவ்விபத்து ஏற்பட்டதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இக்குண்டு வீச்சு விமானம் விபத்துக்கு உள்ளானதும் அந்த இடத்திற்கு அவசர மீட்புக் குழுவினர் உடனடியாக விரைந்தனர். இவ்விபத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் விசாலமான கருப்புப் புகை மண்டலம் எழுந்ததாகவும் அவர்கள் கூறினர்.
இவ்விமானத்தில் பயணித்த குழுவில் இராணுவ அதிகாரிகள், சிவில் அரச உத்தியோகத்தர்கள், அரச ஒப்பந்தக்காரர்கள் எனப் பலதரப்பட்டோர் இருந்ததாக சார்ஜென்ட் ஜோஷுவா டி. ஸ்கார்லோக்கன் தெரிவித்தார்.
இவ்விமானத்தைத் தயாரித்த போயிங் நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில், அக்குண்டு வீச்சு விமானத்தில் தங்களது இரண்டு ஊழியர்களும் இருந்தனர். அவர்களது குடும்பத்தினருடன் நாங்கள் தொடர்பில் இருக்கிறோம் என்று தெரிவித்தது.
ரடார் நவீனமயமாக்கல் திட்டத்திற்கு ஆதரவாக இவ்விமானம் சோதனையில் ஈடுபட்டிருந்த சமயம் இவ்விபத்து ஏற்பட்டதாகவும் அது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் விமானப்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.
சி.என்.என்



