ரஷ்ய எண்ணெய்க் கப்பலை பிரித்தானியா இடைமறிப்பு

1 Min Read

ரஷ்யாவின் நிழல் கப்பற்படையுடன் தொடர்புடைய எண்ணெய்க் கப்பலொன்றை ஆங்கிலக் கால்வாயில் பிரித்தானிய இராணுவம் நேற்று இடைமறித்துள்ளது என்று பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.

இதற்கான உத்தரவை நானே வழங்கினேன் என்று குறிப்பிட்டுள்ள பிரதமர் ஸ்டார்மர், இந்த வெற்றிகரமான நடவடிக்கை ரஷ்யாவுக்கு மற்றுமொரு அடி. உக்ரைனில் புட்டினின் போருக்குத் தூபம் போடுபவர்களை நாங்கள் ஒளிந்துகொள்ள விடமாட்டோம் எனவும் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

கைப்பற்றப்பட்ட இக்கப்பல், கேமரூன் நாட்டு கொடியை ஏந்திய ‘ஸ்மிர்டோஸ்’ ஆகும். ரஷ்ய எண்ணெயைக் கொண்டு செல்வதில் ஈடுபட்டதற்காக கடந்த ஆண்டு இக்கப்பல் மீது பிரித்தானியா தடை விதித்தது.

கப்பல் கண்காணிப்புத் தரவுகளின்படி, ஸ்மிர்டோஸ் கப்பல் கடந்த 5 ஆம் திகதி ரஷ்யாவின் லுகா பே துறைமுகத்தில் இருந்ததும், ஆறு நாட்களுக்குப் பிறகு பால்டிக் கடலை விட்டு வெளியேறியதும் தெரியவந்துள்ளது. அதன் சேருமிடம் எகிப்தில் உள்ள போர்ட் சயீத் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

சர்வதேசத் தடைகளை மீறி ரஷ்ய எண்ணெயைக் கொண்டு செல்லும் ரஷ்யாவின் நிழல் கப்பற்படையுடன் தொடர்புடைய பல கப்பல்களை பிரான்ஸ் இதற்கு முன்னர் இடைமறித்துள்ள போதிலும் பிரித்தானியா இடைமறித்த முதல் கப்பல் இதுவேயாகும்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *