ஆர்மேனியாவின் பொதுத்தேர்தலில் மேற்கத்திய சார்பு பிரதமர் நிக்கோல் பாஷின்யானின் கட்சி தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது.
இத்தேர்தலில் பாஷின்யானின் மிதவாத சிவில் கான்ட்ராக்ட் கட்சி 49.8 சதவீத வாக்குகளைப் பெற்று முதலாமிடத்தையும் ஸ்ட்ராங் ஆர்மீனியா அலையன்ஸ் கட்சி 23.2 சதவீத வாக்குகளுடன் இரண்டாம் இடத்தையும், ஆர்மீனியா அலையன்ஸ் கட்சி 9.9 சதவீத வாக்குகளுடன் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளன.
மூன்று மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட ஒரு சிறிய நாடான ஆர்மீனியா, 2023 இல் அஜர்பைஜானிடம் ஒரு பெரும் இராணுவத் தோல்வியைச் சந்தித்த பிறகு நடந்த முதல் பொதுத் தேர்தல் இதுவாகும்.
தனது மிகப்பெரிய வர்த்தகப் பங்காளியும் பாரம்பரிய நட்பு நாடுமான ரஷ்யாவிடமிருந்து அதிகரித்து வரும் பொருளாதார அழுத்தத்தை எதிர்கொண்டு, மேற்கத்திய நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்த பிரதமர் மேற்கொள்ளும் முயற்சிக்கு இந்த வெற்றி பக்கபலமாக அமையும் என சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
2018 முதல் ஆட்சியில் இருக்கும் பாஷின்யான், தனது கட்சி 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றதாக ஆரம்பகட்ட முடிவுகள் தெரிவித்ததைத் தொடர்ந்து பிரதமர் வெற்றியை அறிவித்தார்.
அத்தோடு ‘ஆர்மீனிய மக்கள் அமைதி, பிராந்திய செழிப்பு மற்றும் ஒத்துழைப்புக்காக வாக்களித்தனர்’ என்று அவர் கூறினார்.



