மாகாண சபைத் தேர்தல்: சிக்கல்களை களைய புதிய சட்டமூலம் தேவை

3 Min Read

சட்டச் சிக்கல்களைக் களைந்து மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்கு பாராளுமன்றத்தில் புதிய சட்டமூலம் நிறைவேற்றப்பட வேண்டுமென, சட்ட மா அதிபர் திணைக்களம் பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு அறிவித்துள்ளது.

இதற்காக நான்கு மாற்று வழிகளையும் அத்திணைக்களம் முன்மொழிந்துள்ளதாக சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார். மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்கான உகந்த தேர்தல் முறையைத் தேர்ந்தெடுப்பது குறித்து ஆராய்ந்து, அறிக்கை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் தலைவர், அமைச்சர் விஜித ஹேரத் இது குறித்து கருத்துத் தெரிவிக்கையில்; தற்போது சட்ட ரீதியான நிலைப்பாடு தெளிவாக உள்ளது. பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கான மிகச் சிறந்த தெரிவு குறித்து விரைவில் இறுதி முடிவு எடுக்கப்படும்.”சட்ட மாஅதிபர் திணைக்களத்தினால் சட்ட நிலைமைகள் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன. இனிவரும் காலங்களில் தேர்தலை தாமதமின்றி நடத்துவதற்கு ஏதுவாக, பொருத்தமான தேர்தல் முறைமை மற்றும் அதில் பெண்கள், இளைஞர்களின் பிரதிநிதித்துவத்தை எவ்வாறு உள்வாங்குவது என்பது குறித்து தெரிவுக்குழு தீர்மானிக்க வேண்டும்” என்றும் அமைச்சர் விஜித ஹேரத் குறிப்பிட்டார்.

மாகாண சபை தேர்தல் சட்டத்தின் 3A(14) பிரிவின் கீழ், எல்லை நிர்ணய மீளாய்வுக் குழு, தமது அறிக்கையை உரிய காலப்பகுதிக்குள் சமர்ப்பிக்கத் தவறியமையே மாகாண சபை தேர்தல்கள் தொடர்பில் சட்ட ரீதியான முட்டுக்கட்டை ஏற்படுவதற்குக் காரணமென, கடந்த வாரம் பாராளுமன்ற தெரிவுக்குழுவிற்கு சட்டமா அதிபர் அறிவித்திருந்தார்.

பிரிவு 3A இன் கீழ் தேவையான நடைமுறைகள் பூர்த்தி செய்யப்படாததால், தற்போது நடைமுறையிலுள்ள 2017 ஆம் ஆண்டின் திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த முடியாது என்றும், இதன் காரணமாக மீளாய்வுக் குழுவின் சட்டபூர்வ அதிகாரம் முடிவுக்கு வந்துள்ளதாகவும் சட்டமா அதிபர்,பாராளுமன்ற தெரிவுக்குழுவிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.

“எனவே, இந்தச் சிக்கலை வெறும் நிர்வாக நடவடிக்கை மூலமாகவோ அல்லது சட்டத்திற்கான எளிய விளக்கங்கள் மூலமாகவோ தீர்க்க முடியாது. பாராளுமன்றத்தில் புதிய சட்டங்களை நிறைவேற்றுவதே இதற்கான ஒரே சட்டபூர்வ தீர்வாகும்” என சட்ட மாஅதிபர் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்தச் சட்டத் தடைகளைத் தாண்டுவதற்கு பாராளுமன்றத் தெரிவுக்குழு பரிசீலிக்கக்கூடிய நான்கு தெரிவுகளை சட்டமா அதிபர் திணைக்களம் வழங்கியுள்ளது:

2017 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க மாகாண சபை தேர்தல்கள் திருத்தச் சட்டத்தை நீக்கிவிட்டு, 1988 ஆம் ஆண்டின் பழைய சட்டத்தின் கீழிருந்த பழைய தேர்தல் முறைக்கு மீண்டும் திரும்புதல்.2017 ஆம் ஆண்டு திருத்தம் செய்யப்பட்ட போதிலும், முந்தைய தேர்தல் சட்டத்தை எதிர்காலத்தில் மீண்டும் நடைமுறைக்குக் கொண்டு வருதல்.

2017 ஆம் ஆண்டு திருத்தத்தை முழுமையாக நீக்கிவிட்டு, தேவைப்படின் பெண்கள் மற்றும் இளைஞர் பிரதிநிதித்துவத்திற்கான விதிகளுடன் கூடிய புதிய தேர்தல் முறையொன்றை அறிமுகப்படுத்துதல்.

பிரிவு 3A இன் கீழ், ஏற்கனவே எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை செல்லுபடியாக்கும் வகையில் தற்போதைய சட்டத்தில் திருத்தம் செய்து, எல்லை நிர்ணய செயல்முறையை அடுத்த கட்டத்திலிருந்து மீண்டும் தொடங்குதல்.

2017 ஆம் ஆண்டின் திருத்தச் சட்டம் முழுமையாக நீக்கப்பட்டால், அதன் மூலம் அதிகரிக்கப்பட்ட பெண்களுக்கான பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்படாமல் போகலாம் என சட்ட மாஅதிபர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, புதிய சட்டமொன்றின் மூலம் பெண்களுக்கான கூடுதல் பிரதிநிதித்துவத்தை பாதுகாக்கவோ அல்லது மீண்டும் அறிமுகப்படுத்தவோ முடியும் என்றும், பாராளுமன்றம் தீர்மானித்தால் இளைஞர் பிரதிநிதித்துவத்தையும் இதில் உள்ளடக்க முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும், பெண்கள் மற்றும் இளைஞர் பிரதிநிதித்துவத்தை வெறும் பாராளுமன்றத் தீர்மானம் மூலம் கொண்டு வர முடியாது என்றும், அதற்கு முறையான சட்டத்திருத்தம் அல்லது பாராளுமன்றத்தின் புதிய சட்டம் அவசியம் என்றும் சட்டமா அதிபர் விளக்கமளித்துள்ளார்.

பணிகளை நிறைவு செய்யும் பொருட்டு, நாளை மறுதினம் 10ஆம் திகதி கூடவுள்ள அடுத்த கூட்டத்தில், காலாவதியான இத்தெரிவுக்குழுவின் பதவிக்காலத்தை, நீடிக்குமாறு கோரவுள்ளதாக அமைச்சர் ஹேரத் தெரிவித்தார். அத்துடன், மாகாண சபை தேர்தல்களை நடத்துவதற்கு 2026 ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் போதிய நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

இதற்கிடையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளால் அதிர்ச்சியடைந்துள்ள தற்போதைய அரசாங்கம், மாகாண சபைத் தேர்தலை திட்டமிட்டு தாமதப்படுத்தி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டியுள்ளார்.

முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களுடன் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் கடந்த சனிக்கிழமை (06) நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.அரசாங்கம் தற்போது மக்களை எதிர்கொள்ளத் தயங்குவதாகவும், இதன் காரணமாகவே மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்குத் தயக்கம் காட்டி வருவதாகவும் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *