இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்டு சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் இன்று (08 ஆம் திகதி) வட கொரியாவுக்கு விஜயம் செய்யவிருக்கிறார்.
ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு சீன ஜனாதிபதி வட கொரியாவிற்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும். வட கொரிய ஜனாதிபதி கிம் ஜான் உன் இன் அழைப்பை ஏற்று சீன ஜனாதிபதி இவ்விஜயத்தை மேற்கொள்கிறார். இதன் போது இரு நாட்டு தலைவர்களும் முக்கிய பேச்சுவார்த்தைகளில் ஈடுபட உள்ளனர்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ஆகியோர் சீனாவுக்கு விஜயம் செய்த பின்னர் சீன ஜனாதிபதி வட கொரியாவுக்கு பயணிப்பது முக்கியத்துவத்துடன் நோக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. வட கொரியாவின் பொருளாதார மற்றும் அரசியல் கூட்டாளியாக சீனா விளங்குகிறது. இரு நாடுகளும் 1,400 கிலோ மீற்றர் நீளமுள்ள எல்லையைப் பகிர்ந்து கொள்கின்றன. மேலும், சீனாவும் வட கொரியாவும் ஒரு பாதுகாப்பு ஒப்பந்தத்தால் பிணைக்கப்பட்டுள்ளதோடு சீனா எந்தவொரு நாட்டுடனும் கொண்டுள்ள ஒரே ஒப்பந்தமாகும். இரு நாடுகளில் ஏதேனும் ஒன்று தாக்கப்பட்டால் பரஸ்பர ஆதரவை இது உறுதி செய்கிறது.



