மகளிர் உலகக் கிண்ண போட்டிக்காக இலங்கை அணி ஆடிய பாகிஸ்தானுக்கு எதிரான பயிற்சிப் போட்டியில் 9 விக்கெட்டுகளால் இலகு வெற்றியீட்டியது.
டெர்பியில் நேற்று முன்தினம் (06) நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்களுக்கும் 8 விக்கெட்டுகளை இழந்து 168 ஓட்டங்களைப் பெற்றது. இதன்போது சிறப்பாக பந்து வீசிய சேதனா விமுக்தி 4 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.
இந்நிலையில் பதிலெடுத்தாட வந்த இலங்கை மகளிர் அணிக்கு ஆரம்ப வீராங்கனையாக அணித் தலைவி சமரி அத்தபத்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 58 பந்துகளுக்கு முகம்கொடுத்த அவர் 9 பௌண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 94 ஓட்டங்களைப் பெற்றார்.
மறுமுனையில் ஆடிய விஷ்மி குணரத்ன 50 பந்துகளில் தலா 3 பௌண்ரிகள் மற்றும் சிக்ஸர்களுடன் ஆட்டமிழக்காது 63 ஓட்டங்களைப் பெற்றார். இருவரும் இணைந்து ஆரம்ப விக்கெட்டுக்கு 160 ஓட்டங்களைப் பகிர்ந்து கொண்டனர். இதன்மூலம் இலங்கை மகளிர் அணி 18.3 ஓவர்களில் 1 விக்கெட்டை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கான 169 ஓட்டங்களை எட்டியது.
மகளிர் டி20 உலகக் கிண்ண போட்டி எதிர்வரும் ஜூன் 12 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணி போட்டியை நடத்தும் இங்கிலாந்தை எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.



