இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி தொடர் மழையால் ஒரு பந்து கூட வீசப்படாது கைவிடப்பட்டது.
ஜமைக்காவின் கிங்ஸ்டன், சபீனா பார்க் மைதானத்தில் இலங்கை நேரப்படி நேற்று அதிகாலை ஆரம்பமாகவிருந்த இந்த போட்டிக்கு தொடர்ச்சியான மழை இடையூறு செய்தது. மழையால் நாணய சுழற்சி போடப்படுவதற்கு 30 நிமிடங்கள் தாமதம் ஏற்பட்டது. தொடர்ந்து நாணய சுழற்சியில் வென்ற மேற்கிந்திய தீவுகள் முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
இலங்கை அணி இந்தப் போட்டிக்கு அசித்த பெர்னாணடோவுக்கு பதில் எஷான் மாலிங்கவுடன் ஆடுவதற்கு தயாரானது. எனினும் பின்னர் தொடர்ந்து பெய்த மழையால் போட்டியை ஆரம்பிக்க முடியாமல்போனது.
இந்தப் போட்டி கைவிடப்பட்டதால் இலங்கை அணி தொடர் தோல்விக்கான வாய்ப்பை தவிர்த்துள்ளது. ஏற்கனவே இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி வெற்றியீட்டிய நிலையில் மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரில் 1–0 என முன்னிலை பெற்றுள்ளது.
மறுபுறம் அடுத்த ஆண்டு நடைபெறும் ஒருநாள் உலகக் கிண்ணத்திற்கு நேரடி தகுதி பெற தரவரிசையில் முன்னேறுவதற்கு மேற்கந்திய தீவுகளுக்கு இந்த ஒருநாள் தொடர் முக்கியமானதாக உள்ளது. எனினும் அந்த அணியால் தற்போது தொடர் வெற்றி ஒன்றை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் இதே சபீனா பார்க் மைதானத்தில் நாளை (09) நடைபெறும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி தொடரை தீர்மானிக்கும் ஆட்டமாக மாறியுள்ளது.



