விளையாட்டுத்துறை அமைச்சுடன் விளையாட்டுத்துறை அபிவிருத்தி திணைக்களம் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இவ்வருடத்திற்கான தேசிய விளையாட்டு விழாவின் முதலாவது நிகழ்ச்சியாக நேற்;று முன்தினம் (06) நடைபெற்ற தேசிய நகர்வல ஓட்டப் போட்டியில் ஆண்கள் பிரிவில் தலவாக்கலையைச் சேர்ந்த விக்னராஜ் வக்ஷன் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
5 ஆயிரம் மீற்றர் மற்றும் 1500 மீற்றர் உள்ளிட்ட நீண்ட தூர ஓட்டப் போட்டிகளில் தேசிய சம்பியனாக உள்ள வக்ஷன், தேசிய நகர்வல ஓட்டப் போட்டியில் வென்ற முதல் தங்கப் பதக்கம் இதுவாகும். முன்னதாக, அவர் 2019 மற்றும் 2024 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தேசிய நகர்வல ஓட்டப் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, கடந்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற்ற தெற்காசிய நகர்வல ஓட்டப் போட்டியில் பங்குகொண்டதன் காரணமாக அவருக்கு தேசிய நகர்வல ஓட்டப் போட்டியில் பங்குபெற முடியாமல் போனது. எவ்வாறாயினும், தெற்காசிய நகர்வல ஓட்டப் போட்டியில் அவர் தங்கப் பதக்கம் வென்றிருந்தார்.
இந்த நகர்வல ஓட்டப் போட்டி நுவரெலியா கோல்வ் புற்தரையில் இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகேவின் தலைமையில் நடைபெற்றதுடன், நாட்டிலுள்ள 9 மாகாணங்களையும் சேர்ந்த 122 வீர, வீராங்கனைகள் பங்கேற்றிருந்தனர்.
மழையுடனான காலநிலைக்கு மத்தியில் 10 கிலோ மீற்றர் தூரத்தைக் கொண்ட ஆண்களுக்கான நகர்வல ஓட்டப் போட்டியானது மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றதுடன், மத்திய மாகாணம் சார்பில் பங்குகொண்ட விக்னராஜ் வக்ஷன், 33 நிமிடங்கள், 28.81 விநாடிகளில் போட்டியை நிறைவுசெய்து முதலிடத்தை பிடித்தார். இப்போட்டியில் புசல்லாவையைச் சேர்ந்த ஜே. குகேந்திர ப்ரஷான் (33.48.01) வெள்ளிப் பதக்கத்தையும், பண்டாரவளையைச் சேர்ந்த மகிந்தன் கோபிநாதன் (34.00.41) வெண்கலப் பதக்கத்தையும் தனதாக்கிக் கொண்டனர். இந்த இரண்டு வீரர்களும் தேசிய நகர்வலத்தில் முதல் தடவையாக பதக்கம் வென்றமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
அத்துடன், இப் போட்டியில் பங்குபற்றிய நீண்ட தூர ஓட்டப் போட்டிகளில் மற்றுமொரு முன்னணி வீரரான மலையகத்தைச் சேர்ந்த கே. சண்முகேஸ்வரன் நான்காவது இடத்தைப் பிடித்தார்.
பெண்கள் பிரிவில் மெத்மி ரசாரா விஜேசூரிய (கிழக்கு மாகாணம் 38:05.96 விநாடிகள்) தங்கப் பதக்கத்தையும். சமுதிகா ஹேரத் (மத்திய மாகாணம் 38:35.78 விநாடிகள்) வெள்ளிப் பதக்கத்தையும் எச்.எம்.டபிள்யூ.ஜீ.டபிள்யூ.எம். ஹேரத் (மத்திய மாகாணம் 39:48.67 விநாடிகள்) வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.
இந்த நிலையில், ஆண்கள் பிரிவில் ஊவா மாகாணம் ஒட்டுமொத்த சம்பியனானதுடன், பெண்கள் பிரிவில் மத்திய மாகாணம் ஒட்டுமொத்த சம்பியனாக தெரிவாகியது.
இந்த இரண்டு பிரிவுகளிலும் முதல் மூன்று இடங்களைப் பெற்றவர்களுக்கு முறையே 50,000 ரூபா, 40,000 ரூபா, 30,000 ரூபா பணப்பரிசுகள் வழங்கப்பட்டன.
இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு பரிசில்களை வழங்கினார்.



