பாகிஸ்தானில் வதியாத அல்லது வெளிநாடுகளில் வாழும் பாகிஸ்தானிய யூடியூபர்கள், உள்ளூர் பார்வையாளர்கள் மூலம் ஈட்டும் வருமானத்தைக் குறிவைத்து இந்த புதிய வரிச் சட்டம் கொண்டுவரப்படவுள்ளது.
அவர்களின் உண்மையான வருமானத்தின் அடிப்படையில் வரி விதிக்காமல், பார்வைகளின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு இந்த வரி கணக்கிடப்படவுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் பார்வையாளர்கள் பார்க்கும் ஒவ்வொரு 1,000 பார்வைகளுக்கும் 195 பாகிஸ்தான் ரூபாய் நிலையான வரியாக விதிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
யூடியூப் விளம்பர வருவாய் நாடுகள் மற்றும் உள்ளடக்கங்களின் அடிப்படையில் மாறுபடும். குறைவான வருவாய் ஈட்டும் உள்ளடக்க உருவாக்குநர்களுக்கு, இந்த புதிய விதிமுறையால் 16% முதல் 66% வரை கடுமையான வரிச்சுமை ஏற்பட வாய்ப்புள்ளது. சில சந்தர்ப்பங்களில் ஈட்டும் வருமானத்தை விட வரி அதிகமாகும் அபாயமும் உள்ளது.
பாகிஸ்தானில் இருந்து ஆண்டுக்கு 50,000-க்கும் அதிகமான பார்வையாளர்களை அல்லது ஒரு காலாண்டில் 12,250 பார்வையாளர்களைக் கொண்ட வெளிநாட்டு உள்ளடக்க உருவாக்குநர்களுக்கு இந்த விதிமுறை பொருந்தும்.
டிஜிட்டல் உருவாக்கத்திற்காக அவர்கள் செய்யும் செலவீனங்களை மொத்த வருமானத்தில் 30% வரை மட்டுமே கழிவாகக் காட்ட முடியும்.
பொதுவாக யூடியூப் வருமானம் என்பது விளம்பரங்கள் மற்றும் பார்வையாளர்களின் ஈடுபாட்டைப் பொறுத்தது, வெறும் பார்வைகளை மட்டும் பொறுத்ததல்ல. ஆனால், வருமானத்தைக் கணக்கிடாமல் “பார்வைகளை” மட்டும் வைத்து வரி விதிப்பது இணைய பொருளாதாரத்தையும், உள்ளடக்க உருவாக்குநர்களின் ஊக்கத்தையும் கடுமையாகப் பாதிக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.



